‘V Shall’ செயலியின் முதல் குறிக்கோள் என்ன? விஷால் விளக்கம்!
வர வர நமக்கு கட்டுப்படியாகும் செலவிலேயே உள்ளங்கையில் அடங்கும் செல்போன்கள் மார்க்கெடில் கிடைத்து விடுகின்றன. அந்த போன்களில் பலவகையான ஆப் எனப்படும் செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே செல்போன்களைபயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும் என்பதும் இப்போது பலருக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் உணவு, உறக்கம், உடல்நலம், உதவி என ஆரோக்கியப் போக்கிற்கும் பேணலுக்கும் ஆப்ஸ்கள் உண்டு. காலையில் சரியான நேரத்துக்கு எப்படியாவது எழுப்பிவிடும் செயலி Alarmy. அலார ஒலியை அமர்த்தப் பல தொடர்ச்சியான செயல்பாடுகளைத் தந்து தூக்கத்தைத் துரத்தும் செயலி இது. மேலும் அன்றைய தட்பவெப்ப நிலையை முன்கூட்டியே கணித்தும் உதவும். SleepCycle தூக்கத்தைக் கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நம்மை எழுப்பி விடவும் உதவும். உடல் நலன், எடைக் கண்காணிப்பு போன்றவற்றை MyFitness Pal, MyPlate Calorie Tracker, My Diet Coach ஆகியன பார்த்துக்கொள்ளும். குறைந்த நேர முதலீட்டில் அதிகப்படி உடல் ஆரோக்கியம் பேணலுக்கு 7 Minute Workout உதவும். மன அழுத்தம் தவிர்க்க HeadSpace உதவியுடன் பரிச்சயம் இல்லாதவர்களும் தியானம் செய்யலாம். இந்நிலையில் உதவும் குணம் சகலரையும் ஒன்று சேர்க்கும் வகையில் நடிகர் சங்க செயலாளரு, தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ‘V Shall’ என்ற மொபைல் ஆப் தொடங்கியிருக்கிறார் அதற்கான காரணத்தை விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.
அதில், “அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்ப்பது அல்லது செல்ஃபி எடுக்க பயன்படுத்துவோம். ஆனால், அதைத் தாண்டி ஸ்மார்ட் போன் மூலமாக நிறைய தெரியாத நபர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்பு.
சமூக சேவை மூலமாக அதைச் செய்ய முடியும். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் மொபைல் செயலி இருக்கிறது. மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என எது வாங்க வேண்டுமானாலும் மொபைல் செயலி இருக்கும் போது, சமூக சேவைக்கு ஏன் இருக்கக் கூடாது என தோன்றியது. இதற்காக சுமார் ஒன்றரை வருடங்கள் நண்பர்களோடு சேர்ந்து, இச்செயலி விஷயங்களில் ஈடுபட்டு வந்தோம். அது தான் ‘V Shall’ செயலி.
உலகத்திலேயே முதல் சமூகசேவை செயலியாக இது உருவாகியுள்ளது. நிறையப் பேர் வீட்டில் பழைய துணிகளோ, குழந்தையின் பிறந்த நாளுக்கு அன்னதானம் உள்ளிட்டவற்றை எப்படி செய்யலாம் என்ற கேள்வி இருக்கும். அந்த சமயத்தில் இச்செயலி உதவியாக இருக்கும். முக்கியமாக கல்வி, மருத்துவம், சாப்பாடு என நிறையப் பிரிவுகளை வைத்திருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் பண வசதியின்றி படிக்க முடியாமல் இருப்பவர்கள், இந்த செயலியில் பதிவு செய்யலாம். இதில் வரும் அனைத்து கோரிக்கைகளுமே சரிபார்த்துதான் வரும். இதில் எந்ததொரு தவறான பதிவுமே இடம்பெறாது. அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிணைப்பதே ‘V Shall’ செயலியின் முதல் பணி.
தொலைபேசியில் இருக்கும் ஒரு பட்டன் மூலமாக, மற்றொருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு. ‘V Shall’ செயலியின் முதல் குறிக்கோள் என்னவென்றால் உதவி வேண்டும் என்பவர்களையும், உதவி செய்ய வேண்டும் என்பவர்களையும் ஒன்றாக சேர்க்கிற ஒரு பாலம். அது தான் இச்செயலியின் முதல் முயற்சி. கண்டிப்பாக இச்செயலியின் மூலம் பலரது வாழ்க்கையை மாற்ற முடியும் என்று நம்புகிறோம்.
முடிந்த அளவுக்கு இன்று கல்வி உதவி செய்யும் போது, நிறைய விஷயங்கள் பார்வைக்கு வராது. உதாரணமாக ஒருவர் 1170 மதிப்பெண் வாங்கி, பணமின்றி கல்லூரி சீட் கிடைக்காமல் போய்விட்டது. இந்த மாதிரி கோரிக்கைகள் அனைத்துமே ‘V Shall’ செயலி மூலம் நிறைவேறும். இதற்காக மட்டுமே இச்செயலி தொடங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதன் மூலம் பலரது வாழ்க்கை மாற்றியமைக்கப்படும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.