April 12, 2021

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா!- ரிலீஸன்று தினகரன் கிளப்பிய சர்ச்சை- வீடியோ!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொது செயலாளர்தான்- என்று டிடிவி தினகரன் தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கடந்த 20-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலா சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. அதிமுகவின் உறுப்பினராக அல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்தலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிகாரம் இருப்பதால்தான் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினார் என்று கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்றும், கட்சியின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு வார ஓய்வுக்குப் பிறகு சசிகலா சென்னை திரும்புவார் எனவும் குறிப்பிட்டார் தினகரன்.