February 7, 2023

சில பல வாரங்களுக்கு முன்பு நம் சுப்ரீம் கோர்ட் வயது வந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்றும் அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்த சமாச்சாரமே மக்களிடம் சரியாகப் போய் சேராத சூழலில்
விபச்சார தொழிலை சட்டமாக்க வேண்டும் என்பதுடன் பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும் என கூறி ஒரு முழு நீள சினிமாவைக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் அமுதவாணன்.

அதாவது Team A Ventures தயாரிப்பில் அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள “வி3” படத்திற்கு ஆலன் செபாஸ்டியன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை என்னவென்றால் இரவு வீடு திரும்பும் விந்தியாவை ஐந்து பேர் கொண்ட குழு பாலியல் வன்புணர்வு செய்கிறது. விந்தியாவின் தந்தையும், தங்கையும் சேர்ந்து தேடுகிறார்கள். எரிந்து போன விந்தியாவின் உடலை காவல் துறை கண்டுபிடிக்கிறது. மீடியாவில் இந்த விஷயம் பெரிதாக, ஆளும் அரசின் அழுத்ததால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்கிறது காவல் துறை. என்கவுன் டர் செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களின் மகன்கள் நிரபராதிகள் என்று மனித உரிமை ஆணையத்தின் கதவை தட்டுகிறார்கள். ஆணையமும் சிவகாமி என்ற அதிகாரியை நியமிக்கிறது. சிவகாமி இது போலி என் கவுன்டர் என்றும் சுட்டு கொல்லப்பட்ட இளைஞர்கள் அப்பாவிகள் என்று கண்டுபிடிக்கிறார். விந்தியா என்ன ஆனார்? இந்த பிரச்சனைகளுக்கு என்னதான் முடிவு என்று படம் செல்கிறது.

நிஜமாகவே சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானாவில் நடந்த சம்பவங்களைக் கொண்ட படத்தின் காட்சி அமைப்பும், கதையை கொண்டு செல்லும் விதமும் மிக சாதாரணமாக இருக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்ங்கும் சரியாக ஒன்றிணையவில்லை. அப்பாவாக நடிக்கும் ஆடுகளம் நரேன், சிவகாமியாக நடிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார், விந்தியாவாக நடிக்கும் பாவனா, போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன்முடி என அனைவரும் கேரக்டர்க்கு ஏற்ற நடிப்பை தந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சிவ பிரபு இரவு நேரக் காட்சிகளை படத்தின் தன்மைக்கேற்ப படமாக்கியுள்ளார். என்கவுண்ட்டர் காட்சியையும், போலீஸை பார்த்தவுடன் இளைஞர் தப்பியோடுவதையும் பரபரப்பு மிகுந்த வகையில் படமாக்கியிருக்கிறார். ஆலன் செபாஸ்டியனின் பின்னணி இசை சற்று இரைச்சலை கொடுத்திருக்கிறது. மிரட்டல் செல்வா ஆக்சனான ஆக்சன் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஆனால் இயக்குநர் இப் படத்தின் முடிவில் இந்தப் பாலியல் பலாத்கார, துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று சொன்ன கையோடு, இரண்டு தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார். ஒன்று “பள்ளிப் பருவத்தில் இருந்தே செக்ஸ் கல்வி இரு பாலருக்கும் அவசியம்” என்கிறார். இது ஏற்கக் கூடியதுதான். ஆனால் அடுத்த பரிந்துரையாக “விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்கிறார். இதுதான் முற்றிலும் ஏற்க முடியாத பரிந்துரையாக இருக்கிறது. . பாலியல் தொழில் அங்கீகரிக்கபட்ட வட இந்திய மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகமாக உள்ளதை இயக்குனர் மறந்தது ஏனோ? குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்கொடுமையால் டெல்லியில் கொல்லப்பட்டாள். போன வாரம் கூட ஒரு கொடூர கொலை நடந்த அதே டெல்லியில் பாலியல் தொழில் நடக்கிறது. இதற்கு என்ன சொல்ல போகிறார் டைரக்டர்.

‘V3’- தப்பான கோணம்

மார்க் 2.5/5