August 20, 2022

ஒரு கதை வாசிக்கும் போதோ , அல்லது காணும் போதோ நம் நாடி நரம்புகளையெல்லாம் தட்டி எழுப்பி ஏதொவொரு உணர்வை கொடுப்பதில் முக்கியப் பங்கு த்ரில்லர் வகைக் கதைகளுக்குண்டு. அதிலும் நம் மூளைக்கு வேலைக் கொடுத்தபடி எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கு கதை களுக்கு எப்போதுமே மவுசுண்டு. அப்படியான கதையில் அதுவும் யார் கொலையாளி என்ற மர்ம முடிச்சுடன் உருவாகி, ரிலீஸாகி இருப்பதுதான் V1 என்னும் படம்.. இந்த திரில்லர் படத்துக்காக கொஞ்சூண்டு யோசித்து படம் பண்ணியவர்கள் டைட்டிலும் இன்னும் மெனக்கெட்டு சகலரையும் ஈர்க்கும் வகையில் வைக்க தவறி விட்டதுதான் இந்த டீம் செய்த மாபெரும் தவறு.

நாயகன் அக்னி (ராம் அருண்) போலீஸ் டிப்பார்மெண்ட்டில் ஃபாரன்சிக் எனப்படும் தடயவியல் டிப்பார்மெண்டின் அதிகாரி. இருட்டைப் பார்த்தால் அதீதமான பயம் ஏற்படும் ஒரு வகையான மன பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஸ்பாட் இன்வெஸ்டிகேசனுக்கெல்லாம் போகாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி டூட்டியை கழிக்கிறார். இவரிடம் ஒரு இளம் பெண் கொலை செய்யப் பட்ட விவகாரத்தைப் பற்றி விசாரிக்க, தோழியும் போலீஸ் அதிகாரியுமான லூனா (விஷ்ணு ப்ரியா) அக்னியின் உதவியை நாடுகிறார். தனக்கான பலவீனத்தால் முதலில் மறுக்கும் அக்னி, பிறகு அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்படி விசாரிக்கையில் இறந்து போன காதலனின் மீது முதலில் சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அவனும் இறந்து அடுத்தடுத்து மூன்று பேர் மீது சந்தேகம் வருவதும் அப்படி சந்தேக லிஸ்டில் இருந்தவரெல்லாம் கொலைச் செய்யப்பட. சில திடுக் திருப்பங்களுக்குப் பிறகு கொலையாளி கண்டுபிடிக்கப்படுகிறார் என்பதுதான் கதை. அந்த வகையில் ஃபாரன்சி டிப்பார்மெண்ட்-டை சேர்ந்த ஒருவரே குற்றவாளியை கண்டுப் பிடிக்கும் முதல் கதை இது என்ர பெருமையையும் இது பெறுகிறது.

படத்தில் நாயகன் & நாயகி இருவர் மட்டுமே மெயின் ரோல். இதில் கதாநாயகியாக வரும் விஷ்ணு பிரியா பாஸ் மார்க் வாங்குகிறார். ஆனால், ஹீரோவாக வரும் ராம் அருண் யூனிபார்ம் போடாமலே போலீஸ் என்று நம்ப வைப்பவர் சில பல இடங்களில் இம்மெச்சூரிட்டியாக தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார் .

ஒரு சினிமா-வுக்கு அவசியமானது என்று பலரும் கருதும் பாடல்கள் இல்லாமல், படம் ஆரம்பிக் கும் போதே ஒரு கொலை விழுவதுடன் தொடங்கி நேரடியாக கதைக்குள் நுழைந்து சந்தேக வலை ஒவ்வொருவர் மீதாக விழுவதும், அவர்கள் மரணிப்பதுமாக நம் மூளைக்கு வேலை கொடுக்க முயற்சிக்கும் போக்கு சரியாகவே இருக்கிறது. ஆனால் இந்த யோசிப்பைத் தாண்டி, படத்தின் திரைக் கதையில் நம்பகத்தன்மை மிகவும் குறைச்சலாக இருக்கிறது. தமிழக போலீஸ் நடை முறைகள் எதுவும் அறியாமல் இந்த இயக்குநரே தன் இஷ்டத்துக்கு கதையைக் கொண்டு போய் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களை செய்திருக்கிறார் இயக்குநர் பாவல் நவகீதன் . அதிலும் முடிவில் கொலைக்கான லாஜிக்கும் காரணமும் எதிர்பாராத விதமாக இருந்தாலும், ஏற்கும்வகையில் அவை இல்லை.

ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கூட படத்தை காலி செய்கிறது. அதிலும் சர்க்கஸ் வித்தைக் காட்டுபவருக்கு பின்னணி போடுபவர் நினைப்பில் இசை விடாமல் ஒலிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். இதனால் சில காட்சிகளில் டயலாக் கூட காதில் விழ மறுத்து விடுகிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல புது டைப்பான த்ரில்லர் கதையைத் தேர்வு செய்த இயக்குனர், அதற்கான தலைப்புத் தொடங்கி திரைக்கதை அமைப்பது வரை சின்னபுள்ளைத் தனமாக கொடுத்து சொதப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மார்க் 2. 5 / 5