உத்தரகண்ட்: நிலச்சரிவால் பெருவெள்ளம் – பலரைக் காணவில்லை -வீடியோ!

உத்தரகண்ட்:  நிலச்சரிவால் பெருவெள்ளம் – பலரைக் காணவில்லை -வீடியோ!

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வெடித்ததால் இரண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன 150க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.உத்தரகண்ட்டில் பனிப்பாறை வெடித்து பலர் மாயமானது குறித்து, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். மாயமானவர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் வழக்கத்தைவிட இந்தாண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரென்று பனிப்பாறைகள் பாளம், பாளமாக வெடித்ததால் சாமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா, ஜோஷிமத் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாமோலியில் இருந்து ஹரித்வார் வரை செல்லும் இந்த இரண்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகளை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். தவுளிகங்கா, ஜோஷிமத் ஆறுகளில் படகு சவாரியையும், திட்டங்களையும் உடனடியாக நிறுத்தமாறு உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் உத்தரவிட்டுள்ளார். வெள்ளப்பெருக்கு ரைனி கிராமத்தில் நடைபெற்று வந்த ரிஷிகங்கா நீர்மின் நிலைய திட்டத்தை புரட்டிப்போட்டுள்ளது. அங்கு பணிபுரிந்து வந்த 150க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், துணை ராணுவ படையினரும் சாமோலி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். டேராடூனில் இருந்து புறப்பட்ட மிக்-17 விமானங்களும், துருவ் ஹெலிகாப்டர் உள்பட மூன்று ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்தர் சிங்கை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, பனிப்பாறை வெடிப்பு குறித்த நிலவரத்தையும், அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், போர்க்கால அடிப்படையில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் ஒவ்வொருவரின் உயிர் பாதுகாப்புக்கும் உத்தரகாண்ட் மாநிலமும், நாடும் துணை நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!