April 17, 2021

உதவி பாலம் அமைக்கும் இணையதளம்!

கொரோனா ஏற்கனவே பொருளாதாரத்தை பதம் பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கைவசம் சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக்கும் சேமிப்பை கரைந்து விட்டவர்கள் நிலை மிகவும் கடினம் தான். உலகில் பல நாடுகளில் இது தான் நிலை. அமெரிக்காவில், இப்படி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்களில் ஒன்று ’1 கே பிராஜெக்ட்’ – (https://www.1kproject.org/ ).

கொரோனா பாதிப்பால் பணியிழப்பு அல்லது ஊதியம் குறைப்பு போன்றவற்றுக்கு உள்ளாகி உடனடியாக பொருளாதார உதவி தேவைப்படும் குடும்பங்களை கண்டறிந்து, பணம் அளிக்க வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். உதவிக்கு கண்டறியப்படும் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளிக்க இருக்கின்றனர். பண உதவி செய்யக் கூடிய ஸ்பான்சர்கள் இந்த தொகையை அளிப்பார்கள். இரு தரப்பினரையும்  இணைக்கும்  வகையில் இந்த தளம் செயல்படுகிறது.

உதவி தேவைப்படுபவர்களை, அவர்களை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனங்கள் பரிந்துரைக்கலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அதன் பிறகு குடும்பங்களின் நிலை சரி பார்க்கப்பட்டு உதவிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இதே போல, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், கொரோனாவால் பாதிப்பு உள்ளான உள்ளூர் ரெஸ்டாரண்ட்களுக்கு கைகொடுக்கும் வகையிலும் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. ’சேவ் அவர் பேவ்ஸ்’ (https://saveourfaves.org/) எனும் அந்த தளம் மூலம், மக்கள் உள்ளூர் ரெஸ்டாரண்ட்களுக்கான பரிசு அட்டைகளை வாங்கி அவற்றை ஆதரிக்கலாம்.

கடும் பொருளாதார பாதிப்பு நிலவும் சூழலில், உள்ளூர் வணிகர்களையும், வர்த்தகங் களையும் ஆதரிப்பதன் மூலம், பொருளாதார மீட்சிக்கு நம்மால் உதவலாம் என்று சொல்லப்படுவதற்கு செயல்வடிவம் கொடுக்க முயல்கிறது இந்த இணையதளம்.

 

சைபர்சிம்மன்