December 9, 2021

கல்பனா சாவ்லா வின் பெயர் அமெரிக்க விண்கலத்திற்கு சூட்டப்பட்டு கவுரவம்!

இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை பெற்ற விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வின் பெயர் அமெரிக்க விண்கலத்திற்கு சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா 1962ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே பறப்பதில் ஆர்வம் கொண்ட கல்பனா சாவ்லா விமானியாக மட்டுமின்றி, வானவூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற பின், நாசாவில் பணியாற்றி வந்த கல்பனா சாவ்லா கடந்த 1995ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1997ம் ஆண்டு கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ். 87-ல் பயணித்த ஆறு விண்வெளி வீரர்களில் கல்பனாவும் ஒருவர்

இந்தியரான ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தப்படியாக விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியராகவும் முதல் இந்திய பெண்ணாகவும் கல்பனாவுக்கு இந்த பயணம் பெருமை தேடித் தந்தது. பின்னர் கடந்த 2003ம் ஆண்டு கல்பனா உள்பட 7 பேர்கொண்ட குழுவுடன் பயணித்த கொலம்பியா விண்கலம், தனது 16 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடமே இருந்த நிலையில், வெடித்து சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள்.

உயிரிழந்த விண்வெளி வீரர்களுக்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசா விண்ணோட்ட பதக்கம் மற்றும் சிறப்பு சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கியது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம், தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு ‛எஸ்எஸ் கல்பனா சாவ்லா’ எனப் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் அறிவித்த தகவல் இதோ :

நாசாவுக்குச் சென்ற இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வுக்கு இன்று நாங்கள் மரியாதை செலுத்த இருக்கிறோம். மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா அளித்த பங்களிப்பு நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். எங்களின் அடுத்த என்ஜி-14 சைக்னஸ் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டுவதில் நார்த்ராப் க்ரூம்மேன் நிறுவனம் பெருமைகொள்கிறது.

மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் களுக்கு மரியாதை அளிப்பது எங்கள் நிறுவனத்தின் பாரம்பரிய வழக்கம்.இந்தியாவில் பிறந்து வளர்ந்து முதன் முதலாக விண்வெளிக்குச் சென்ற கல்பனா சாவ்லா வரலாற்றில் இடம் பிடித்தவர் என்பதால் அவரின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. விண்வெளித் திட்டங்களுக்கு கல்பனா சாவ்லா ஏராளமான தியாகங்களைச் செய்து, தனது உயிரையும் இழந்துள்ளார். அவரின் மரபு, வழிகாட்டல் அடுத்துவரும் விண்வெளி வீரர்களுக்கும் இருக்க வேண்டும்