November 28, 2022

இந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி!

நேற்றே நம் ஆந்தை ரிப்போர்ட்டர்-ரில் சொல்லி இருந்தபடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நமஸ்தே ட்ரம்ப் , சபர்மதி ஆசிரம நிகழ்ச்சிகளை முடித்த ட்ரம்ப், ஆக்ரா சென்று தாஜ்மஹாலைப் பார்த்து ரசித்தார். 2-வது நாளான இன்று, அதிபர் ட்ரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இவரை , ஜனாதிபதி , பிரதமர் மோடி வரவேற்றனர். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்று கொண்டார். இதனையடுத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை பிரதமர் அறிமுகப்படுத்தினார். இதை அடுத்து ராஜ்காட்டில் மகாத்மா காந்தி சமாதிக்கு மலர் வளைய அஞ்சலி செலுத்திய பின், அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் டெல்லி ஹைதரபாத் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் இருவரையும் அங்கு பிரதமர் மோடி வரவேற்றார்.இதைத் தொடர்ந்து இரு தலைவர்கள் மட்டும் தனியாகவும், அதன் பிறகு இரு நாட்டு உயர்நிலைக் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நேற்றே நமஸ்தே டிரம்ப் உரையில் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, அணுசக்தி, பாதுகாப்பு, அறிவுசார் சொத்துடமை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது! .

இந்நிலையில் டெல்லி ஐதராபாத் மாளிகையில் இரு தரப்பு பேச்சுக்கு பின் பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தனது அழைப்பை ஏற்று டெல்லி வந்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமை அளிக்கிறது என்றார். இந்தியாவை நாங்கள் பெரிதும் நேசிக்கிறோம் என்று கூறிய டிரம்ப், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தன்னை வரவேற்றது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் இந்திய மக்கள் பிரதமர் மோடியை அதிகம் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது

*இந்திய மக்களின் அன்பான வரவேற்பு தம்மையும் தன் மனைவியையும் நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டது. வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா. தமது இந்திய பயணம் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது.

*ரூ.21,300 கோடி மதிப்புக்கு இந்தியாவுடன் ராணுவ தளவாடங்கள் வழங்க ஒப்பந்தம் கையெழுத் தாகி உள்ளது. ராணுவத் துறையில் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைப்பை விரிவுப்படுத்த அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

*இந்திய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும்.இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் பயிற்சி அளிக்கும்

*வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தியா – அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தகம் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு.

*அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்திய வம்சாவளியினர் அளப்பறிய பங்கு அளித்தனர்.இந்திய மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பை மறக்க முடியாது.இந்திய மக்கள் எங்கள் மீது அளப்பறிய அன்பை வெளிப்படுத்தினர்.

https://twitter.com/realDonaldTrump/status/1232288843757387777

*எனது இந்திய வருகை 2 நாடுகளுக்கும் மிகுந்த பலன் அளிக்க கூடியதாக இருந்தது. அடிப்படை வாத இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

*இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

*இருநாடுகளும் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயாராகி வருகிறோம்,பொருளாதார உறவு குறித்துதான் பிரதானமாக பேசினோம்.இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

*அமெரிக்காவில் இருந்து எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்ய ரூ.1,42,000 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூட்டறிக்கையில் பேசினார்.