October 18, 2021

அமெரிக்கா அதிபர் தேர்தல் ; ஹிலாரி – டிரம்ப் ஃபைனல் ‘நீயா? நானா?’ முழு வீடியோ!!

அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலையொட்டி டிரம்ப் – ஹிலாரி இடையேயான மூன்றாவது நேரடி விவாதம், லாஸ் வேகஸ் நகரில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் உள்நாட்டுப் பிரச்னைகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு இரு பிரதானக் கட்சி வேட்பாளர்களும் பதிலளித்தனர். உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பான அந்தக் காரசாரமான விவாதத்தின்போது இருவரும் கடுமையான சொற்களுடன் மோதிக் கொண்டனர். விவாதம் தொடங்குவதற்கு முன்பும், விவாத நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பும் மேடையில் டிரம்ப் – ஹிலாரி கை குலுக்கிக் கொள்ளவில்லை.

us oct 21

மூன்று சுற்றுகளிலுமே ஹிலாரியே மக்கள் மத்தியில் முன்னிலை பெற்றிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. இறுதி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு, சிஎன்என் செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52% ஆதரவும், டிரம்ப்புக்கு 39% ஆதரவும் கிடைத்துள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்தக் கருத்துகணிப்பு குறித்து, ‘முடிவு பாதகமாக இருந்தால் அதனை ஏற்கத் தயாரா?’ என்று, விவாதத்தை ஒருங்கிணைத்த செய்தியாளர் கிறிஸ் வாலஸ் குறிப்பாக எழுப்பிய கேள்விக்கு, முடிவுகள் வெளியாகும்போது அது பற்றிக் கருத்து தெரிவிப்பேன்; இப்போது எதுவும் சொல்ல முடியாது; தற்போதைக்கு அது மர்மமாகவே இருக்கட்டும் என்று டிரம்ப் பதிலளித்தார்.இந்தக் கருத்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவாதத்தை தொடங்கிய ஹிலாரி, ‘டிரான்ஸ்பசிபிக் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நான் வலுவாக எதிர்க்கிறேன். இதை தற்போது எதிர்ப்பது போலவே, அமெரிக்க ஜனாதிபதியானாலும் எதிர்ப்பேன்’ என்றார். ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஹிலாரி முன்னர் ஆதரித்து இருந்ததால், அவரது தற்போதைய நிலைப்பாட்டை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். ஹிலாரியை, ‘அருவருக்கத்தக்க பெண்’ என இழிவாக பேசிய டிரம்ப், ஈ–மெயில் விவகாரம் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்ட அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்கக்கூடாது என சாடினார்.

இதற்கு பதிலளித்த ஹிலாரி, ‘ஜனாதிபதி பதவிக்கு டிரம்ப் ஆபத்தானவர். இந்த உயரிய பதவிக்கு தகுதியற்ற அவர், தனது பேச்சின் மூலம் ஒவ்வொரு முறையும் அதை நிரூபித்து வருகிறார்’ என்று ஆவேசமாக கூறினார்.உடனே இடைமறித்த டிரம்ப், ‘நீங்கள்தான் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்’ என்று உரக்க கூறினார்.மேலும் தன் மீது 9 பெண்கள் கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், ‘இவையெல்லாம் வெறும் 10 நிமிட புகழுக்காக கூறப்பட்ட புகார்கள். அவை அனைத்தும் பொய். அது குறித்து இதோ இங்கே அமர்ந்திருக்கும் என் மனைவியிடம் கூட நான் மன்னிப்பு கேட்கவில்லை. ஏனெனில் நான் அப்படி எந்த தவறையும் செய்யவில்லை’ என்றார்.

அடுத்ததாக குடியுரிமை விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், எல்லைக்கு அப்பால் இருந்து அமெரிக்காவுக்குள் கடத்தப்படும் போதைப்பொருட்களால் இளம் அமெரிக்கர்களின் ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக கூறினார். எனவே அமெரிக்கா– மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் தனது திட்டத்தை மீண்டும் வலியுறுத்தி பேசினார்.

அப்போது பேசிய ஹிலாரி, மெக்சிகோ அதிபர் நியட்டோவுடன் சமீபத்தில் டிரம்ப் நடத்திய சந்திப்பின் போது ஏன் இந்த சுவருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை? எனக்கேட்டு டிரம்ப்பை கேலி செய்தார். மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கூட, ஒரு கோடீசுவரரை விட அதிக வருமான வரியை செலுத்துவதாக டிரம்ப்பை மறைமுகமாக தாக்கினார்.

இந்த தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப் ஊடகங்கள் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டி”வாக்காளர்களின் மனங்களில் ஊடகங்கள் விஷத்தைக் கலக்கி வருகின்றன. ஆனால் அமெரிக்க வாக்காளர்கள் உண்மையை உணரத் தொடங்கிவிட்டார்கள்’ என்று  சொன்னார்.

இதற்கு பதிலளித்த ஹிலாரியோ, ’டிரம்ப் ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் நாம் 240 ஆண்டு பழமையான ஜனநாயகத்தையும், சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடைமுறைகளையும் கொண்டுள்ளோம் என்று உரைத்த ஹிலாரி, இத்தகைய தேர்தல் முடிவுகளை நாம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=dGQGwIr47YY