அமெரிக்க அதிபர் டிரும்பு – வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டிரும்பு – வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் கிம் – ட்ரம்ப் இருவரும் சிங்கப்பூரில் இன்று நேரில் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு அதிபர்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பல முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியது. ஒப்பந்த விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

சர்வதேச மாநாடுகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சிங்கப்பூர் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

வடகொரியாவும் அமெரிக்காவும் கடுமையாக மோதிக்கொள்ளும் நிலையில் இருந்தன. தென்கொரியா – அமெரிக்கா போர் பயிற்சி என அமெரிக்கா வடகொரியாவை மிரட்ட முற்பட்டபோது நாளுக்கொரு தொலைத்தூர ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியது. வடகொரியாவில் இருந்து அணு குண்டுகளை சுமந்து சென்று நேரே அமெரிக்காவில் வீசக்கூடிய வல்லமை உடைய ஏவுகணைகள் தயார் என வடகொரியா எச்சரிக்கை செய்தது.

வடகொரியா மீது பல தடைகளை நேரடியாக விதித்த அமெரிக்கா வடகொரியாவின் நெருங்கிய நண்பரான சீனாவை பயன்படுத்தி வடகொரியாவை ஒடுக்கலாம் என ஒரு கட்டத்தில் திட்டம் வகுத்தது. வடகொரியா மீதான தடைகள் சீனா விஷயத்திலும் அமல் செய்யப்படும் என எச்சரித்தது.

இப்படி இருந்த குமுறும் நிலை திடீரென மாறியது.

வடகொரியா அதிபரின் முன் முயற்சியின் பேரில் தென்கொரியாவுடன் பேச்சு நடந்தது.

அமெரிக்காவுடன் நேரில் பேசத் தயார் என வடகொரியா கூறுவதாக தென்கொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்புகளும் தத்தம் ஆதரவு நாடுகளுடன் ஆலோசனைகளை நடத்தின.

வடகொரியா சீனாவுடன் பேசியது.

தென் கொரியா அதிபர் அமெரிக்காவுக்கு பறந்து சென்று பேசினார்.

வடகொரியா உயர் ராணுவ அதிகாரியும் வெள்ளை மாளிகைக்கு நேரே சென்று பேசினார்.

சிங்கப்பூர் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்தது.

உலகமே எதிர்பார்த்தபடி இன்று காலை டிரம்ப்பும் – கிம்மும் செண்டோஸா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் சந்தித்தனர்.

ஒருவரை ஒருவர் கை குலுக்கி அன்போடு வரவேற்றனர்.

இரு நாடுகளின் அதிபர்கள் முதலில் தனியாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் மட்டுமே உடனிருந்தனர். இரு அதிபர்களும் நடத்திய பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடந்தது.

அதைத்தொடர்ந்து இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

இரண்டு நாடுகளின் அதிபர்கள் முன்னிலையில் அவர்களினுடைய வழிகாட்டுதலின்படி அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

காலை உணவும், பேச்சுவார்த்தை நடைபெறும்பொழுதே எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

காலை உணவோடு பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் நிறைவு செய்தனர்.


அதன் பிறகு, மீண்டும் ஒருமுறை டிரம்ப்பும் – கிம்மும் தனித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த முறை அவர்கள் இருவரும் தனியாக சுற்றி நடந்துகொண்டே பேசினார்கள்.

ஹோட்டல் காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. பீஸ்ட் என்று அழைக்கப்படும் அந்தக் கார். பீரங்கி குண்டுகளால்கூட துளைக்க முடியாதது.

முழுமையான பாதுகாப்பு வசதிகளையும், தகவல் தொடர்பு வசதிகளையும் கொண்டது அந்தக் கார்.

டிரம்ப் – கிம்மை அழைத்துக்கொண்டுபோய், தனது காரை திறந்து காரின் பாதுகாப்பு முறைகளை விளக்கினார்.

அதன்பிறகு, தொடர்ந்து பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.

மீண்டும், இருவரும் பேச்சுவார்த்தை நடந்த அறைக்கு திரும்பியதும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரு நாடுகளின் அதிபர்களும் கை குலுக்கிக் கொண்டனர். பிறகு சில, இயல்பான கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு கிம் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

டிரம்ப் பேட்டி

செண்டோஸா தீவிலுள்ள கேபெல்லா ஹோட்டலில் சுமார் 2500 பத்திரிகையாளர்கள் உச்சிமாநாட்டு பற்றிய செய்திகளை சேகரிக்க காத்திருந்தனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்தியில் டிரம்ப் உச்சிமாநாட்டுக்கு பின் பேசினார்.

இரு தரப்பினரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறோம். அந்த ஒப்பந்தத்தில் விரிவாக எல்லா விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தில் உள்ள விசயங்கள் பற்றி மாலையில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிறகு, டிரம்ப்பும் செய்தியாளர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

அமெரிக்கா, வடகொரியா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற மனநிறைவோடு உச்சிமாநாடு இன்று காலை நிறைவடைந்தது.

மாலை ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் வெளியாகும்.

Related Posts

error: Content is protected !!