“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று

மெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55_வது வயதில் 1968_ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் “வாட்டர் கேட்” மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்த கட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார் என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும். இந்த விவகாரம் 1974_ம் ஆண்டு மத்தியில் விசுவரூபம் எடுத்தது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் நிக்சன் மறுத்து வந்தார்.

இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்திய பாராளுமன்ற குழு “நிக்சன் குற்றவாளி! அவரை பதவியில் இருந்து நீக்க, அமெரிக்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரலாம்” என்று சிபாரிசு செய்தது.

அமெரிக்க அரசியல் சட்டப்படி, ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பாதிக்கு மேற்பட்டவர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அதன் பிறகு மேல்_ சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியும்.

ஆனால் நிக்சனை பதவியில் இருந்து நீக்காமல், அவருடைய போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும் என்று ஒரு பகுதியினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “நான் குற்றவாளி” என்றும் ஒப்புக்கொண்டார்.

நிக்சனின் அறிக்கை வருமாறு:-
“இந்த ஊழல் வழக்கில் நான் குற்றவாளி. நடைபெற்ற தவறுகளுக்கெல்லாம் நான்தான் பொறுப்பு. அதற்காக வருந்துகிறேன். எதிர்க்கட்சி தேர்தல் அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் வேலை என் அனுமதியுடன்தான் நடந்தது. இந்த ஊழல் பற்றி ரகசிய போலீசார் விசாரணை தொடங்கியபோது அதை தடுக்கவும் திட்டமிட்டோம். எல்லா உண்மைகளையும் என் வக்கீலிடமும், என் உதவியாளர்களிடமும் மறைத்துவிட்டேன். இந்த குற்றத்திற்காக என்னை பதவி நீக்கம் செய்வது நியாயம் அல்ல.” இவ்வாறு நிக்சன் கூறியிருந்தார்.

இந்த திடீர் அறிவிப்பு நிக்சனின் தீவிர ஆதரவாளருக்கு பெரும் அதிர்ச்சியூட்டியது.

“நான் குற்றவாளி” என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, “நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்” என்று அறிவித்தார்.

உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். “பதவியை விட்டு நீங்களே (நிக்சன்) விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்” என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக ராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல்_சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

9_8_1974 அன்று அதிகாலை 6_30 மணிக்கு நிக்சன் டெலிவிஷனில் தோன்றி தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். ராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு ராஜினாமா ஏற்கப்பட்டது. “ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்ற ஒரு வரியை மட்டும் எழுதி கீழே கையெழுத்து போட்டிருந்தார். அமெரிக்க அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவியை விட்டு விலகினால், துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக பதவி ஏற்க வேண்டும். அதன்படி இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்த ஜெரால்டு போர்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

புதிய ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே, நிக்சனும், அவர் குடும்பத்தினரும் ஜனாதிபதி மாளிகையை (“வெள்ளை மாளிகை”) காலி செய்துவிட்டு வெளியேறினார்கள். சிப்பந்திகளிடமும், அதிகாரிகளிடமும் விடைபெறும்போது நிக்சனின் மனைவி _ மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிப்பந்திகளும் அழுதார்கள். நிக்சன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. “நண்பர்களே, போய் வருகிறேன். உங்கள் அன்பை என்றும் மறக்கமாட்டேன்” என்று கூறினார்.

சொந்த ஊரான கலிபோர்னியாவில் சென்று குடியேற நிக்சன் விரும்பினார். இதனால் ஹெலிகாப்டர் விமானம் மூலம் நிக்சனும், குடும்பத்தினரும் புறப்பட்டுச் சென்றனர். பதவி விலகியது பற்றி நிக்சன் கூறியதாவது:-

“என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து இறுதிவரை என்னால் போராடமுடியும். அதையே என் குடும்பத்தினரும் விரும்பினார்கள். ஆனால் நான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டு நிர்வாகத்தின் முழு நேரத்தையும் பாராளுமன்றத்தின் பணியையும் இந்த விசாரணைக்காக வீணாக்க விரும்பவில்லை.என் வாழ்க்கையே போராட்டத்தில் தொடங்கியதுதான். என் மனதிற்கு நியாயம் என்று எது படுகிறதோ, அதற்காக போராடி இருக்கிறேன். சில சமயம் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். சில சமயம் தோல்வி அடைந்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று. நான் பதவியில் இருந்து விலகிச் சென்றாலும் சமாதானத்துக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்று கூறி இருந்தார்.

பதவியை இழந்தபோது நிக்சனுக்கு வயது 61. வக்கீல் பட்டம் பெற்ற அவர், கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1946_ல் அரசியலில் குதித்து, 1952_ம் ஆண்டு ஐசனோவர் ஜனாதிபதி ஆனபோது நிக்சன் துணை ஜனாதிபதி ஆனார். 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக நீடித்தார். 1960_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கென்னடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு 1968_ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். நிக்சனின் மனைவி பெயர் பேட்ரிசியா. இவர்களுக்கு டிரிசியா, ஜுலியா என்ற 2 மகள்கள் இருந்தனர்.

டெயில் பீஸ்

ராஜினாமாவுக்கு பிறகு நிக்சனுக்கு மிகுந்த பண நெருக்கடி ஏற்பட்டது. அவருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயிரம் வரி பாக்கி இருப்பதாக ரெவின்யூ இலாகா அறிவித்தது. அதே நேரத்தில் நிக்சனை பதவியில் இருந்து விரட்டுவதற்கு காரணமாக இருந்த கார்ல் பெர்ன்ஸ்டன், பாப்உட் ஆகிய இரண்டு நிருபருக்கும் பணம் வந்து குவியத்தொடங்கியது. ஜனாதிபதி தேர்தல் ஊழல் பற்றி இவர்கள் இருவரும் தான் முதலில் செய்தி வெளியிட்டு அதை பெரும் பிரச்சினையாக மாற்றினார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதத்தொடங்கிய ஒரு புத்தகத்துக்கு ரூ.1 கோடி தருவதாக ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

நிக்சன் ராஜினாமா பற்றி இங்கிலாந்து, இந்தியா, மேற்கு ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. குடியரசு கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குடியரசு கட்சித் தலைவர் ஜான்ரோட்ஸ் கூறுகையில், “ஒரு பெரிய பிரச்சினை ஓய்ந்தது” என்று குறிப்பிட்டார். நிக்சனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜார்ஜ் மக்கவர்ன் (ஜனநாயக கட்சி) கூறும்போது, “இது அமெரிக்காவுக்கும், நிக்சனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துன்பமான நேரம்” என்று தெரிவித்தார்.

aanthai

Recent Posts

குரங்கு அம்மைக்கு புதிய பெயர் =எம்.பாக்ஸ் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

குரங்கு அம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில்…

4 hours ago

’பாம்பாட்டம்’ -டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி…

4 hours ago

ரஜினி நடித்த ’பாபா’ படம் மீண்டும் வெளியாகுங்கோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள *பாபா* படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு…

1 day ago

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில்…

1 day ago

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்!

மத்திய புள்ளி விவரங்கள் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி தொழிற்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

1 day ago

பவுடர் – விமர்சனம்!

சினிமா ஃபீல்டில் இருந்தே ஒதுங்கிய சாருஹாசன் என்ற நடிகரை மறுபடியும் அழைத்து வந்து தாதா 87 படமெடுத்து அதையும் கம்ர்ஷியல்…

2 days ago

This website uses cookies.