September 18, 2021

எச் 4 விசா : ஜூன் வரை நோ பிராபளம்!

ஒபாமா அதிபராக இருந்தபோது எச் 4 விசா உள்ளவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வது தொடர்பான முடிவை டிரம்ப் நிர்வாகம் வரும் ஜூன் மாதம் வரை ஒத்திவைத்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தற்காலிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டினருக்கு எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. ஜ்இதை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களே. இந்த விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் குடியேற எச் 4 விசா வழங்கப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியில் இருந்த போது கடந்த 2015ம் ஆண்டு எச் 4 விசா உள்ளவர்கள் அமெரிக்காவில் பணிப்புரிய அனுமதி வழங்கப்பட்டது. பின் அதிபர் டிரம்ப் பதவியேற்றப்பின் எச் 1 பி விசாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக எச் 4 விசா உள்ளவர்கள் பணிப்புரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பல இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இறுதி முடிவை பிப்ரவரி 28ம் தேதி டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முடிவினால் அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து மேலும் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை. அதனால் வரும் ஜூன் மாதம் வரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பல இந்தியர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்னும் 4 மாதங்களுக்கு வேலை பற்றிய பயம் இல்லை என அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.