February 7, 2023

திரைக்கதை, நேர்த்தி, நெட்டிவிட்டி, யதார்த்தம் என்று சிலாகித்து பேச வைக்கும் படம் ‘உறியடி’.

சில படங்களை பார்க்கும்போது ‘யாருய்யா இந்த பட டைரக்டர்.. இப்படி கொல்லுறாரு’னு கேட்க தோணும். சில படங்களை பார்த்தால் ‘அட கொன்னுட்டாரு…பின்னிட்டாரு டைரக்டரு…யாருய்யா அது’ என ஆர்வமாக விசாரிக்க தோணும். ஆண்டுக்கு 250க்கும் அதிகமான படங்கள் வெளியாகிறது. பெரும்பாலானவை முதல் ரகம். சில படங்கள் மட்டுமே இயக்கம், திரைக்கதை, நேர்த்தி, நெட்டிவிட்டி, யதார்த்தம் ஆகியவைகளுக்காக பேசப்படுகின்றன. அப்படி பேச வைக்கும் படம் ‘உறியடி’….இப்படியொரு படமா என்று கேட்கலாம். ஆம்.. விஜய்குமார் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து இருக்கும் படம்.

Presentation1

ஒரு படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பார்வையாளனுக்கும் இது எந்த மாதிரியான படம் என்று புரிந்துவிடும். திருச்சி பக்கம் புறநகரில் இருக்கிற இன்ஜினியரிங் கல்லுாரியில், பக்கத்து ஏரியாவில் உறியடி கதை ஆரம்பிக்கிறது. சில சீன்களிலேயே நான் வழக்கமான டைரக்டர் இல்லை என்பதை நிரூபித்துவிடுகிறார்.

சரி, கதை என்ன?

இறந்து போன ஒரு ஜாதி தலைவருக்கு சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. அத்தோடு ஹாஸ்டலில் தங்கி இருந்து பைனல் இயர் இன்ஜினியரிங் படிக்கும் கிராமப்புற அல்லது நடுத்தர, ஏழை மாணவர்களிடம் இருந்து இன்னொரு கதை. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி, முரண்பட்டு, சண்டை போட்டு, ரத்தத்தில் முடிகிறது. இதற்கு மேல் கதை வேண்டாம். சுவாரஸ்யம் போய்விடும்.

படத்தின் பெரிய ப்ளஸ் கதைக்களம், தமிழ்சினிமாவுக்கு ரொம்பவே புதிது. திருச்சி பக்கத்தில் உள்ள ஒரு புறநகர் இன்ஜினியரிங் கல்லுாரி ஹாஸ்டல், ஒரு தாபா, பார் என புதுப்புது சீன்கள் வைத்து இருக்கிறார். படத்தின் இடைவேளை வரை ஒரு பெண் வருகிறார். சில ரொமான்ஸ் சீன்கள். அவரை ஹீரோயின் என்று வைத்துக்கொள்ளலாம். டூயட், மொக்கை காமெடி கடைசிவரை ஹீரோயினை கதையில் கொண்டு வர வேண்டுமே என இயக்குனர் எதற்கும் மெனக்கெடலை.. அப்புறம், வில்லனாக வரும் மைம்கோபி.. மனிதர் யதார்த்த நடிப்பால் மிரட்டி இருக்கிறார். அப்புறம், அறிமுகம் இல்லாத பல கேரக்டர் பேச வைக்கிறார்கள். ஹீரோவின் நண்பர்கள், வில்லன், அவருடைய நண்பர், ஒரு சில சீன்களே வரும் திருநங்கை, மனநோயாளியாக வரும் வில்லன் என பாத்திர படைப்புகள் அனைத்தும் அவ்வளவு பிரஷ்.

வசனங்களும், சீன்களும் இதற்குமுன்பு பார்த்திராதவை. படம் முழுக்க இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் புகைத்துக்கொண்டே ,குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரத்தவாடை, வன்முறை கொஞ்சம் அதிகம். ஆனாலும், கதைக்கு தேவைப்படுகிறது. தேவையில்லாத பாடல் இல்லை. கடைசியில் நச்சென்று ஒரு பாடல், தேவைப்படும் இடங்களில் மட்டுமே அழுத்தமான விஜய்குமாரின் ஆர்,ஆர், அப்படியொரு நேர்த்தியான பால்லிவிங்ஸ்டன் கேமரா, அபிநவ்சுந்தர்நாயக்கின் எடிட்டிங் என எல்லாமே தமிழ்சினிமாவுக்கு நல்வரவு.

சில வன்முறை சீன்களை பார்க்கும்போது நமக்கே நாலுபேரை வெட்டி தள்ள வேண்டும் என நரம்பு முறுக்கேறுகிறது.
குறிப்பாக, கிளைமாக்ஸ் லாட்ஜ் சீன்கள்..அப்பப்பா!

இயக்குனர் எடுத்த ஜாதி சப்ஜெக்ட் ரொம்ப சீரியசானது. கொஞ்சம் தடம் புரண்டால் ஜாதி சண்டையில் முடியும். அல்லது ஒரு ஜாதியினர் படத்துக்கு எதிராக கொடி பிடிப்பார்கள். ஆனால், எந்த ஜாதி என்று காண்பிக்காமல், ஜாதி எப்படியெல்லாம் ஆட்டிவிக்கிறது என்பதை யதார்த்தமாக காண்பித்து இருக்கிறார்.கடைசியில் ஜாதிக்கு எதிராகவும் படத்தை முடித்து இருக்கிறார்.

மொத்தத்தில் உறியடி சினிமாத்தனம் இல்லாத சினிமா….சரி, யாருய்யா டைரக்டரு என்று கேட்டால், அவரு யாரிடமும் வேலை பார்க்கவில்லை. நாளைய இயக்குனர் தொடரில் பரிசு வாங்கியவர், சூதுகவ்வும் நலன்குமாரசாமி நண்பர். அதனால்தான் உறியடி படத்தில் நலன்குமாரசாமியும் ஒரு இணை தயாரிப்பாளர் என்கிறார்கள். சரி, யாருய்யா என்றால், ஹீரோவாக அப்படி கூட சொல்லமுடியாது. முக்கிய பாத்திரத்தில் வருகிறாரே அந்த பையன்தான் என்கிறார்கள். அவரே தயாரிப்பாளரும் கூட. இவர் திருச்சி பையன் அல்ல. சென்னை தாம்பரம் பையனாம். ஐடியில் வேலை செய்துவிட்டு, சினிமா ஆசையில் நாளைய இயக்குனர் போட்டியில் பங்கேற்றாராம்.

இந்த படத்தின் ரிசல்ட் எப்படி என்று தெரியவில்லை. அது பொதுமக்கள் பார்வை, படம் ரிலீஸ் நேரம், வியாபார நுணுக்கம்,தியேட்டர் பிரச்னை போன்ற புற சூழ்நிலைகளை பொறுத்து இருக்கிறது. ஆனால், 2016ம் ஆண்டில் பேசப்படுகிற இயக்குனராக, இந்த படத்தை பார்ப்பவர்கள் ‘யாருய்யா டைரக்டரு’ என்று கேட்கப்படக்கூடியவராக விஜய்குமார் இருப்பார்.

மீனாட்சி சுந்தரம்