உறியடி 2 – திரை விமர்சனம்!

அதென்னவோ தெரியவில்லை காணாமல் போன முகிலன் சொன்னது போல் ‘தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் திட்டம் என்றாலோ, தொழில்கள் என்றாலோ அது அனைத்தும் உலகில் காலம் கடந்த (காலாவதியான) தொழில்நுட்பங்கள் திணிக்கப்படுவதாகவோ, உலகில் உள்ள கழிவுகளை கொண்டு வந்தோ அல்லது விசக்கழிவுகளை உண்டாக்கும் அழிவு திட்டங்களாகவோ மட்டும் உள்ளன‌’ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலொரு படம்தான் உறியடி 2. இப்படியான திட்டங்களின் பின்னணி மற்றும் பாதிப்புகளை சொல்லும் நோக்கில்  எடுத்துக் கொண்ட விஷயத்தை இன்றைய காலக்கட்டத்தில் வாழ்வோர் ஒவ்வொரு காட்சியை உணரும்படியும் ரசிக்கும்படியும்  அமைத்துள்ளார் இயக்குநர். ஆனால் மேற்படி பிரச்சினைக்கான தீர்வு . வழக்கமான தமிழ் படங்களில் வருவது போல் அமைந்ததால் படம் முழுசாக  மனதில் ஒட்டவில்லை.

ஆனாலும் நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குடிப்பழக்கத்தால் 18 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைப்பதால் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த தீமைகள் தான் மனித உயிர்களை அதிக அளவில் பறிப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இவற்றை விட அதிக காற்று, நீர் உள்ளிட்ட மாசுக் களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். அதிலும் இந்தியாவில் பல்வேறு மாசுகளுக்கு அதிகம் பேரை பலி கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம்தான் முன்னணியில் இருக்கிறது என்று அண்மை யில் கூட தகவல் வெளியான நிலையில் உறியடி 2 என்ற பெயரில் அந்த மாசு பிரச்னையை மையமாக கொண்டு போரடிக்காமல ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டும்.

கதை பற்றி சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் வெளிநாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வழக்கம் போல் தமிழகத்தில் கையூட்டுக் கொடுத்து காலூன்றிய ஒரு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தன் நண்பர்களுடன் கெமிக்கல் இன்ஜினியராக வேலைக்கு சேர்கிறார் ஹீரோ லெனின் விஜய் ( விஜயகுமார் ) . அங்கு சரியான பராமரிப்பு இல்லாததால் அங்கிருந்து கசியும் விஷ வாயு நண்பன் , அவன் பெற்றோர் மட்டுமின்றி அந்த கிராமத்தையே காவு வாங்குகிறது . இதனால் ஆவேசமாகும் நாயகன் இந்த இந்த விபத்துக்குக் காரணமான தொழிலதிபர் , அவருக்கு உடந்தை யாக இருக்கும் அரசியல்வாதிகளை எப்படி தண்டிக்கிறார் என்பதுதான் உறியடி 2 … அதாவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடக்க இருந்தது அல்லது நடந்தது அல்லது நடக்க வேண்டியது இதுதான் என்று தெளிவாக படம் போட்டுக் காட்டி இருக்கிறார். அதையொட்டி நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மட்டும் மிஸ்ஸிங்.

இந்த உறியடி ஹீரோவாக நடித்திருக்கும் இயக்குநர் விஜயகுமார் இந்த ஒட்டு மொத்தக் கதைக்கே முதலாளி என்பதால் பக்காவாக ஹோம் ஒர்க் செய்து ஸ்கோர் செய்திருக்கிறார், அவரது நண்பர்களாக நடித்திருப்பவர்கள், ஹீரோயினாக நடித்திருக்கும் விஸ்வமயா, ஜாதி கட்சி தலைவர் (செங்கை குமார் கதாபாத்திரம் – அவர்தானே என்று பக்கத்துச் சீட் பையன் கண்டறியும் வண்ணம் எக்ஸ் போஸ் செய்திருக்கிறார்) , தொழிற்சாலை முதலாளி, தொழிற்சாலை பணியாளர்கள் என்று அத்தனை பேரும் தன் கேரக்டரை செம்மையாக செய்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மோசமில்லை, ஆனால் பல இடங்களில் தம் கட்டி கொடுத்துள்ள இசை காது செவிலை பதம் பார்த்து விடுகிறது.

அரசியல்வாதி +, அரசு அதிகாரிகள் கூட்டுடன் நம் மண்ணை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் போக்கை மாற்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதை விட, நாமே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசன் பாணியை நினைவூட்டு கிறார்கள். அதே சமயம் க்ளைமாக்சில் 1930களின் சினிமாப் பாணியை நினைவுப் படுத்தி அனுப்பதால் உறியடி 2 அவ்வளவாக எட்டவோ / ஒட்டவோ இல்லை.

மார் 2. 75 / 5