March 26, 2023

நாடு முழுவதும் சிறு நீர் சேகரிப்பு வங்கி !- மத்திய அமைச்சர் தகவல்!

நம் உடலில் இருந்து அன்றாடம் வெளியேறு அல்லது கழியும் வியர்வை, நகம், முடி, மலம், சிறுநீர் ஆகியவை. இவைகளில், சிறு நீரை மட்டும் நச்சு பொருள் அல்ல என்றும் இதனை மறுபடியும் உபயோகிக்க முடியும் என்றும் அவ்வப்போது பலரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது இது ஓர் வடிகட்டிய திரவ பொருளாம். இரத்தத்தில் இருந்து பிரித்துடுக்கப்படும் அதிகப்படியான சத்துகளில் இருந்து வெளிப்படும் திரவமாமாம். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, எகிப்தியர்களும் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்றவர்கள் சிறுநீர் சிகிச்சையை அவர்களது மருத்துவத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். பிரெஞ்சு நாட்டு பெண்கள் குளியலில் சிறுநீர் சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளனர். இது, அவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், இருவேளை ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து குணமடையலாம் என்றும் அவர்கள் நம்பியிருக்கின்றனர். நம் இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த மொரார்ஜி தேசாய் தன் மூத்திரத்தை தானே குடிப்பதால் தன் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொன்னதும் பலருக்கு நினைவிருக்கும்.

இதனிடையே நம் நாடு முழுவதும் தாலுகா தோறும் சிறு நீர் சேமிப்பு வங்கி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..இதன் மூலம் யூரியா உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் விவசாயிகள் பத்து லிட்டர் கேனில் சிறுநீர் சேமித்துக் கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார்.

இது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி நாக்பூரில் நிருபர்களிடம் விவரித்து பேசிய போது, “மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் உள்ளது. ஆனால், அனைத்தும் வீணடிக்கப்படுகிறது. வீணாகச் செல்வதை லாபமாக மாற்றுவதே எனது கொள்கை. இது ஒன்றும் மோசமான யோசனை அல்ல. எனவே வட்டங்கள் தோறும் சிறுநீர்சேமிப்பு வங்கி ஏற்படுத்தப் போகிறோம். அதில் இருந்து யூரியா உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவது பற்றி சுவீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சங்கடமும் இல்லை. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்திற்கு மாற்றாக இயற்கை உரம் உள்ளது. இதனுடன் நைட்ரஜனை சேர்க்கும் போது விவசாயிகளுக்கு உதவும். அரசின் இந்த முடிவு ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட சோதனை நாக்பூர் பக்கம் உள்ள தபேவாடா கிராமத்தில்(கட்கரி சொந்த ஊர்) நடந்தது.

தற்போது சிறுநீரை சேகரிப்பதற்காக விவசாயிகளுக்கு பத்து லிட்டர் கேன்கள் வழங்கப்படும். அதில் சிறுநீரை சேகரித்து தாலுகாவில் உள்ள மையங்களில் கொடுத்தால் லிட்டருக்கு ஒரு ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான கேன்களை அரசே விநியோகம் செய்யும். இந்த திட்டம் முதலில் கிராம பகுதிகளில் செயல்படுத்தப்படும். இங்குதான், சிறுநீர் தண்ணீருடன் கலந்து கழிப்பறைக்கு செல்லாது. இந்தசிறுநீரை சுத்திகரித்து, சுத்தமான இயற்கை உரமாக உற்பத்தி செய்யலாம். இந்த திட்டத்தின் பொருளாதாரம் மற்றும் சாத்தியம் குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. நாடு முழுவதும் இதை செயல்படுத்தினால் அபரிமிதமான யூரியா உரம் உற்பத்தி செய்யலாம். இதனால் யூரியா இறக்குமதி குறையும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் யாருக்கும் பாதிப்பு வரப் போவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.