August 14, 2022

உ .பி. : உன்னாவ் பாலியல் பலாத்காரம் செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு…!

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் கோர்ட்டுக்கு போகும் வழியில் நேற்று முன்தினம் குற்றவாளிகள் தீ வைத்து கொளுத்தினர். இதை அடுத்து மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்றுவந்த அந்த பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2018 டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த அந்த பெண்ணை மானபங்கம் படுத்தும் செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம் காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி நீதிமன்றத்திற்கு புறப்பட்டார்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்து அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பெண், மேல் சிகிச்சைக்காக டில்லி கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அந்த பெண்ணுக்கு நேற்று இரவு 11.10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய தீவிரமாக முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், இதனால் அவர் நேற்று இரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவரது உடல், பிரேத பரிசோதனைக்குப் பின், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை, காவல்துறையினரிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நாட்டு மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

முதல்வர் ஆதித்யநாத் இரங்கல்

உன்னாவ் பெண் உயிரிழந்துள்ளதற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,”உன்னாவில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதுக்கப்பட்ட பெண்ணின் மரணம் பெரும் வருத்தமடைய செய்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதன் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சப்தார்ஜங் மருத்துவமனைக்கு நேரில் சென்ற தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உன்னாவ் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதே போல் விசாரணை முடிந்து குற்றவாளிகளை ஒரே மாதத்திற்குள் தூக்கிலிட வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே உன்னாவ் பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச தலைமை செயலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சம்பவம் வன்மையாக கண்டித்தக்கது எனவும், இது ஒரு கருப்பு நாள் எனவும் தெரிவித்தார்.

உன்னாவ் பெண் சிகிச்சை பெற்ற டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், தனது 6 வயது மகள் மீது பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமியின் தாயை கைது செய்து அழைத்து சென்றனர்.