ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறை: சென்னையில் அறிமுகம்!

ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறை: சென்னையில் அறிமுகம்!

மிழகத்தில், ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தின் கீழ், ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறை, சென்னை தி.நகரில் அடுத்த மாதம் பரிசோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ‘ஸ்டேடிக்’ என்ற மீட்டரை, தமிழக மின் வாரியம் பொருத்தியுள்ளது. மின் ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். சிலர் நேரில் செல்லாமல் இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது, குறித்த நேரத்தில் செல்லாமல் தாமதமாக கணக்கெடுப்பது, அதிக மின் பயன்பாட்டை குறைத்து கணக்கெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால், மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதுடன், மின் வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை செயல்படுத்துமாறு, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மீட்டரில் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் தேதி, மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன் அலுவலக, ‘சர்வர்’ உடன் இணைக்கப்படும்.

அந்த தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படும். டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்படுத்த மின் வாரியம் தாமதம் செய்தது. நீண்ட இழுபறிக்கு பின் சோதனை முயற்சியாக, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்படும் சென்னை தி.நகரில், 1.41 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி 2021 ஜனவரி மாதம் துவக்கப்பட்டது. திட்ட செலவு 144 கோடி ரூபாய் ஆகும்.

இதற்காக 7 கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மீதி தொகையில் புதிய மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்றது. தி.நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை முடுக்கி விட்டது. தற்போது வரை 1 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தி.நகரில் ஸ்மார்ட் மீட்டர் திட்ட செயல்பாட்டை பொறுத்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது தி.நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பரிசோதனை முயற்சியாக, அந்த மீட்டர்கள் வாயிலாக மார்ச் முதல் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக, 500– -1,000 இணைப்புகள் என, படிப்படியாக மார்ச் மாதம் முழுவதும் அனைத்து ஸ்மார்ட் மீட்டர்களிலும் கணக்கெடுக்கப்படும். மின் பயன்பாடு எப்படி பதிவாகிறது; அந்த விபரம் நுகர்வோருக்கு தெரிவிக்கும் வேகம் போன்றவை ஆய்வு செய்யப்படும். அதை தொடர்ந்து, மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தும் பணிகள் துவங்கப்படும். ஸ்மார்ட் மீட்டர்பொருத்துவதால் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கெடுப்பதுடன், மாதந்தோறும் கணக்கெடுக்கும் முறையும் அமல்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!