நம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா?

நம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா?

ம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது என்பதுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப் பட்டுள்ளது என்பதும் இந்த பூங்காவில் இரவில் தங்கி விட்டு பகலில் பூங்காவிலுள்ள பல்வேறு மிருகங்களை அணமையில் பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதாவது தெரியுமா?.

ஆம்.. ‘நான் ஒருத்தன் என்னத்தை பெரிசா சாதனை பண்ணிட முடியும்?’ என விட்டேத்தியாக பேசுபவர்கள் ஒருமுறை இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வாருங்கள். ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி என்பதை கேட்கும் போது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதுபோன்று மேலும் பல அரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போன சாதனை மனிதர்தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பால்ஃபருக்கு, குடும்ப நண்பர் மூலம் மெட்ராசில் துணை சர்ஜன் வேலை கிடைத்தது. இதற்காக 1834இல் மெட்ராஸ் புறப்பட்ட பால்ஃபர், வழியில் மொரீஷியஸ் சென்றார். இந்த பயணம் அவரது வாழ்வை மட்டுமின்றி மெட்ராசின் வாழ்வையும் மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அங்கு மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் களையிழந்து கிடந்தது பால்ஃபரின் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

1836இல் இந்தியாவில் கால்பதித்த பால்ஃபர், மருத்துவராக நாடு முழுவதும் சுற்றினார். இந்த பயணத்தின்போது இந்தி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். இதனால் உள்ளூர் மக்களுடன் பேசிப் பழக வசதியாக இருக்கும் எனக் கருதி, இவரை சிறிய கிராமப் பகுதிகளில் பணியாற்ற அனுப்பினர். இதுமட்டுமின்றி அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அடிக்கடி பால்ஃபர் பயன்பட்டு வந்தார்.

இந்த பணிக்கு இடையில், பால்ஃபர் இந்தியா குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரட்டினார். இவற்றைக் கொண்டு, வெவ்வேறு தட்பவெட்ப நிலையில் படையினரின் உடல்நலனைப் பேணுவது எப்படி? பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன? என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டார். அவர் ஒரு மருத்துவராகவும் இருந்ததால், பருவநிலை மாற்றம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவாக விளக்க முடிந்தது.

இதுமட்டுமின்றி மொரீஷியசில் பார்த்ததை வைத்து, மரங்கள் அழிக்கப்பட்டால் அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே பல பஞ்சங்களைப் பார்த்து பதறிப் போயிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பால்ஃபரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்ற ஒன்று தொடங்கப்பட்டது.

சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது. விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855இல் ‘மெட்ராஸ் உயிரியல் பூங்கா’ தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.

பின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம்மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.

1975இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார். இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதன் நிழலில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இப்பேர்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில்தான் தற்போது உள்ள விலங்குகளை உங்கள் வீட்டில் இருந்த படியே ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே பூங்காவில் இரவில் தங்கி பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை வருகிறார்கள்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். அதே நேரத்தில் வர வாய்ப்புகளற்ற பார்வையாளர் களும் உள்ளனர். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Streaming என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.

இது தவிரிர பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதியும் நேற்று முதல் அமல் படுத்தப் பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம்.

பின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது..இதற்கு இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் கட்டணமாக செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டள்ளது.

இங்கு ஆயிரத்து 675 வகையான உயிரினங்கள் உள்ளன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ் உயிரிகள், மீன்கள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கே சில விலங்குகளைப் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். நீர்யானை, அதன் குட்டி, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவறி விடவே கூடாது.

அது மட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் குட்டி சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விலங்கியல் பூங்கா திறந்திருக்கும். இரண்டு வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு நுழைவுக் கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம். சவாரிகளுக்குத் தனிக் கட்டணம்.

ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. காலையில் சென்றால், மாலைவரை குதூகலமாக இருக்க வண்டலூர் பூங்கா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற இடம் .என்பதையும் தாண்டி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இடமிது.

error: Content is protected !!