சென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாத் துளிகள்!

மெட்ராஸ் யுனிவர்சிட்டியான சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் 164 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை ஆளுனர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

பின்னர் பேசிய கவர்னர் ஆன்.என் ரவி, “பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். தமிழ் மொழியை நாடு முழுவதும் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் இருக்கை அமைக்க அரசு முன்வர வேண்டும். தமிழ் இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்கது, பழமை வாய்ந்தது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன் என்றார்.

இதை அடுத்து பேசிய மு.க ஸ்டாலின், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. வேலைகள் இருக்கின்றன, திறன் குறைவாக இருக்கிறது; இதனை சரி செய்யவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்கலைக்கழகங்கள் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே. வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞனும் கூறக்கூடாது என்ற வகையில் அரசு செயல்படுகிறது. எனது ஆட்சிக்காலம் கல்வியின் பொற்காலமாக மாறவேண்டும்” என்றார்.

அமைச்சர் பொன்முடி பேசுகையில், இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தபப்ட வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன என தெரிவித்தார்.