October 26, 2021

ஐக்கிய நாடுகள் தினம் இன்று! =+ ஐ. நா. கம்ப்ளீட் டீடெய்ல்!

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள்   தினமாக “உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட” தீர்மானித்தது. 1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

un day oct 24

ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்கிறோம். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம்தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. அமைப்புக்கு முன்னதாக இதுபோன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தை பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே 2ம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது. 2ம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. 2ம் உலகப்போரின்போது எதிரி நாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்தார்கள். பிறகு 1945ம் ஆண்டு 50 நாடுகள் அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைப்பெற்றது. அமெரிக்க, இங்கிலாந்து, சோவியத் யூனியன் மற்றும் சீன நாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின்பேரில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஓக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவு செய்யப்பட்டது. 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி 50 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த போலந்து நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இடத்தின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51ஆனது. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது.

1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. ஐ.நா.சபை சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம் போன்ற சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம்தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்‘தான் ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதிமன்றம் தவிர மற்ற 5 அமைப்புகளும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகிறது.

the-fellowship-will-be-held-from-2-to-20-november-2015-in-geneva-FaFKSE-clipart

1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களை பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.

2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற அதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.

3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் 2ம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.

5. ஐ.நா. செயலகம்: ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.

6. சர்வதேச நீதிமன்றம்: ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.

ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன. உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவி மக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு என்பது அனைத்து நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.

ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள்

ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தில் உலக அமைதி மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கங் களாக சொல்லப்பட்டிருக்கிறது.

1. உலகநாடுகளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துதல்.

2. பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல்.

3. சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதித்து அவைகளுக்கு ஆதரவுத் தருதல்.

4. மேற்கூறியவற்றை அடைவதற்கு வழிவகைகள் கண்டு அவை நிறைவேற கருவியாக இருத்தல்.
அமைப்பு

ஐக்கிய நாடுகள் கழகத்தின் ஆறு முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை:

1. பொதுப்பேரவை

2. பாதுகாப்பு மன்றம்

3. பொருளாதார மற்றும் சமுதாய மன்றம்

4. தர்மகர்த்தா கழகம்

5. உலக நீதிமன்றம்

6. செயலகம்

இவைத் தவிர ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதி மன்றங்களும், இவை எல்லாவற்றிற்கும் பொதுவான பல்வேறு இதர அமைப்புகளும் உலகெங்கும் இருக்கின்றன. இவைகளுடைய நோக்கங்களும் திட்டங்களும் உலகளாவியவை.

ஐக்கிய நாடுகள் கழக குடும்பம்

மேற்கூறப்பட்ட அமைப்புகளோடு குழந்தைகள் நல நிதிக் கழகம், முன்னேற்ற திட்ட குழு இன்னும் சிறப்புமிக்க இதர பிரதிநிதி மன்றங்கள் பல உள்ளன. இவையெல்லாம் உலக நாடுகளில் சமுதாய முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேவைப்படும் உதவிகள் சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதோடு அவற்றிற்கு பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.