August 14, 2022

மோடியின் ஆட்சிக்கு தரப்பட்டுள்ள எக்ஸ்பயரி டேட் தாண்டிவிட்டது! மம்தா அதிரடி பேச்சு!

பா.ஜ.க.-வுக்கு எதிராக தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டம், கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார். எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்தில் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதி தாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள் தான்.

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்திகளான பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை மீட்பதை தான் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறேன். இந்த மேடையில் நான் இந்தியாவைப் பார்க்கிறேன். வேறு வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனாலும் நம்முடைய சிந்தனை ஒன்று தான் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் நமது முன்னோர்கள் இந்தியாவின் தாரக மந்திரமாகச் சொன்னார்கள். ஆமாம் நாம் வேறு வேறாக இருந்தாலும் நம்முடைய லட்சியம் ஒன்றுதான். இந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருக்குமானால் வெற்றி நமக்குத்தான். தோல்வி நரேந்திர மோடிக் குத்தான்.

சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் நரேந்திரமோடி தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எந்தக்கூட்டமாக இருந்தாலும் மைக் பிடித்ததும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட அவருக்கு பயமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது நரேந்திரமோடிக்கு தெரிந்து உள்ளது. அதனால் தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார். பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் இங்கு வர முடியாத தலைவர்களுக்கும் இந்த கூட்டணிக்குள் வர தயங்கிக்கொண்டு இருக்கும் தலைவர்களுக்கும் நான் சொல்வது இதுதான், நம்முடைய ஒற்றுமை நரேந்திரமோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமையைக் காப்போம். அதன் மூலம் இந்தியாவைக் காப்போம் என்பது தான்.

என்னிடமே சிலர் கேட்கிறார்கள், நரேந்திரமோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று, அவர் உங்களுக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரா இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம். நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. 100 கூட்டம் பேசினார். 1,000 பொய்களைச் சொல்லி இருப்பார்.

இது யாருக்கான ஆட்சி? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

நரேந்திரமோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப் போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். அதுதான் நரேந்திரமோடி ஆட்சியில் நடக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும். அதனை நீங்கள் உணர்ந்து இங்கு கூடி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிமயமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி.

நரேந்திரமோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திரமோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும், அமித் ஷாவுமே பயப்படுவார்கள். அந்தளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருக்கக் கூடியவர் மம்தா பானர்ஜி. இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நாம் அனைவரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களுக்கு ஒன்றாகச் சென்று மத்திய அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும்.

பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும். பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. அது அவர் களுக்கு சாதகமாக ஆகிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை, மோடியை வீழ்த்தும், நமது ஒற்றுமை, நம்மை வெற்றி பெற வைக்கும்”இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மம்தா பானர்ஜி பேசுகையில், “இந்தப் பேரணி நடைபெறும் ராணுவ அணிவகுப்பு மைதானம். சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பல பேரணிகளைப் பார்த்துள்ளது. இன்று சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பேரணி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பேரணி திருப்பு முனையாக அமையும் என நம்புகிறேன்.

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஆயுள்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாரதீய ஜனதா ஆட்சிக்கும் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த ஆயுள் காலம் நிறைவடைந்துவிட்டது.

மோடியின் ஆட்சிக்கு தரப்பட்டுள்ள எக்ஸ்பயரி டேட்டை அரசு தாண்டிவிட்டது.

இந்த மண்ணில் உள்ள மக்களை மத அடிப்படையிலும் வகுப்பு அடிப்படையிலும் பிரிக்க பாகிஸ்தான் 70 ஆண்டுகளாக முயற்சி செய்தது. ஆனால் வெறும் நாலே ஆண்டுகளில் மோடி அரசு அதனைச் சாதித்துவிட்டது.

மோடி அரசு இந்த மண்ணில் உள்ள எல்லாவற்றையும் மாற்ற முயற்சி செய்து வருகிறது.

இந்தியாவின் சட்டங்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள். அந்தச் சட்டங்களுக்கு அடித்தளமான அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

சரித்திரத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். புவியியலையும் மாற்றவும் முயற்சிக்கிறார்கள்.

மோடி அரசு எல்லாவற்றையும் மாற்ற முயற்சி செய்கிறது.

எல்லாவற்றையும் மாற்ற நினைக்கும் மோடி அரசும் மாற்றப்பட வேண்டிய ஒன்றாகி உள்ளது.

விவசாயிகளிடத்தில் பணம் இல்லை. புதிதாக வேலை வாய்ப்பு இல்லை. அப்புறம் எதற்கு இடஒதுக்கீடு? இந்த நாட்டில் ஒரு புதிய விடியலைக் கொண்டுவருவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

24 எதிர்க்கட்சிகளின் சார்பில் இங்கு தலைவர்கள் பேசினர். ஆனால் பாஜக நம்மைப் பார்த்து, எங்கே உங்கள் தலைவர் என்கிறார்கள்.

நமக்கு தலைவர் இல்லை என அவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த மாபெரும் பேரணியில் பேசிய தலைவர்கள் எல்லோரையும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

பிரதமர் யார் என்று இப்பொழுது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு பின் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.

எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு செல்வது ஒரு தலைவரின் முக்கிய வேலையாகும். மற்றவர்களை அரவணைத்து அழைத்துச் செல்ல மோடிக்குத் தெரியாது. அது அவருக்குக் கைவராத கலை.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கிறதா.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா அவமதிக்கப்படுகிறாரா?

சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறதா?

ஆட்சியில் உள்ள அமைப்புகளையே சீராக கொண்டு செல்ல மோடியால் முடியவில்லை.

சிபிஐ அமைப்பின் நிர்வாகிகள் எல்லாம் அவமானப்படுத்தப்பட்டு நிற்கிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கதியும் அதுதான்.

அமல் பிரிவு இயக்குநரகத்துக்கு உள்ளேயேயும் ஒற்றுமை இல்லை.

பாரதீய ஜனதா ரத யாத்திரை என்ற பெயரால் மேற்கு வங்கத்தில் வகுப்புக் கலவரங்களை உருவாக்க திட்டமிட்டார்கள்.

நமக்கு ஜகந்நாதரின் ரத யாத்திரை தெரியும். அதில் நமக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் வகுப்புக் கலவரத்தை உருவாக்க ரத யாத்திரையா? அதனை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனங்களில் உறுதி எடுத்துவிட்டனர். இனிமேல் பாரதீய ஜனதாவுக்கு நல்ல காலம் திரும்பி வராது. மோடிக்கு நல்ல நாள் திரும்பி வரப்போவதில்லை. பாஜகவின் முடிவு துவங்கிவிட்டது.

நான் ஒரு துறவி என்கிறார் மோடி.

அவர் அரசு கவிழட்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கட்சி அலுவலகங்கள் எல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் போல பொருள்கள் நிரம்பி வழிகின்றன.

அரசியலில் கண்ணியம் தேவை. மற்றொரு அரசியல் தலைவரை கண்ணியத்தோடு நடத்த வேண்டும். நீங்கள் லட்சுமண ரேகையைத் தாண்டி எல்லோரையும் விமர்சனம் செய்கிறீர்கள். அவர்கள் திரும்ப விமர்சனம் செய்யும்பொழுது, என்னை திட்டுகிறார்கள் என்று கோபப்படுகிறீர்கள். இது என்ன நியாயம்.

2014இல் வாக்களித்து ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் இழந்தார்கள். இன்னொரு முறை வாக்களித்தால், வங்கியில் நீங்கள் போட்டு வைத்திருக்கின்ற டெபாசிட் தொகையும் பறிபோய் விடும். விழிப்போடு செயல்படுங்கள்

இந்தியாவை ஆண்டவர்களைப் பற்றி படித்திருக்கிறோம். நாமும் அறிந்துள்ளோம். இப்படி பாசிச ஆட்சி நடத்தியவர்களைக் கண்டதில்லை. இந்த அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என மம்தா பேசினார்.

இறுதியில் பாஜகவை வெளியேற்றுவோம்.

தேசத்தைக் காப்பாற்றுவோம்

ஜெய் ஹிந்த்

வந்தே மாதரம்”என்று முழங்கிய பின் தனது உரையை மம்தா பானர்ஜி நிறைவு செய்தார்.