April 13, 2021

அன்னிய நேரடி முதலீடு கொள்கையில் அடுத்தடுத்த மாற்றங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

நமது நாட்டில் தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு, வருவாய், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் ஏற்ற விதத்தில், அன்னிய முதலீடு வரத்து குவிவதை நோக்கமாக கொண்டு, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்த மாற்றங்களை கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

indi a serp 1

இதன் முக்கிய அம்சங்கள்  இதோ:

* உணவு பொருட்கள் உற்பத்தியை, தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் தீவிர மாற்றம் செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படுகிற, உற்பத்தி செய்யப்படுகிற உணவுப்பொருட்கள் மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தகத்தில் தானியங்கி வழியின்கீழ் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

* பாதுகாப்பு துறையில் (ராணுவம்) 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதுவரை தானியங்கி முறையின்கீழ், கம்பெனி பங்குகளில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வந்தது.மாற்றங்களைப் பொறுத்தமட்டில், 1959-ம் ஆண்டின் ஆயுத சட்டத்தின்கீழ் வரும் சிறிய ரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் உற்பத்திக்கு, அன்னிய நேரடி முதலீடு வரம்பு பொருந்தும்.

* ஒலிபரப்பு வண்டி சேவைகள் நுழைவு தடங்கள் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகள் திருத்தப் பட்டுள்ளன. டெலிபோர்ட்டுகள், டி.டி.எச்., கேபிள் நெட்வொர்க், மொபைல் டி.வி., ஹிட்ஸ் சேவை துறையில் தானியங்கி முறையின்கீழ் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

* மருந்து துறையில் தானியங்கி முறையின்கீழ் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி, இந்த துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பிரவுன்பீல்டு (நகர்ப்புறம்) மருந்து துறையில், 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். 74 சதவீதத்துக்கு அதிகமான அன்னிய நேரடி முதலீடுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும்.

* சிவில் விமான போக்குவரத்து துறையில் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களை நவீனமயமாக்கவும், உயர்ந்த தரத்தை பராமரிக்கவும் பிரவுன்பீல்டு (நகர்ப்புறம்) விமான நிலைய திட்டங்களில் தானியங்கி முறையின்கீழ் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

* திட்டமிட்ட விமான போக்குவரத்து சேவை, உள்நாட்டு திட்டமிட்ட பயணிகள் விமான நிறுவனம், பிராந்திய விமான போக்குவரத்து சேவை துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். இதில் 49 சதவீதம் தானியங்கி முறையின் கீழும், 49 சதவீதத்துக்கு அதிகம் என்றால் அரசின் அனுமதியின் கீழும் அனுமதிக்கப்படும்.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்

* தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவு செய்யப் படுகின்றன. எனவே அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுகிறது. மேலும் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு தானியங்கி முறையின் கீழும், 74 சதவீதம் வரை அரசின் அனுமதியுடனும் அனுமதிக்கப்படும்.

* பாதுகாப்பு, தனியார் பாதுகாப்பு நிறுவனம், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைகளில் கிளை, தொடர்பு, திட்ட அலுவலகங்கள் அல்லது பிற எந்த தொழில் அலுவலகங்கள் தொடங்கவும், அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் உரிமமோ, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அனுமதியோ பெற்றிருந்தால், பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற தேவை இல்லை.

* கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை பரா மரிப்பு (நாய்கள் வளர்ப்பு உள்ளிட்டவை), செயற்கை முறை மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகியவற்றில் தானியங்கி வழியின்கீழ் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி தரப்படுகிறது.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

* குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள். விசா நடைமுறை எளிதாக்கப்படும். சொத்துகள் வாங்கவும், குடும்பத்தினர் வேலை பெறவும் அனுமதி தரப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை அளித்தது.

* சிரமத்தில் உள்ள கட்டுமானத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது.