பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் – 1948ல் நடந்ததன் குறிப்புகள்! பாகம் 4

இந்திய அரசியல் சாசன சட்டத்தினை வடிவமைத்து நிறைவேற்றும் பெரும் பொறுப்புடன் அரசியல் சாசன நிர்ணய சபையின் கூட்டங்கள் நிகழ்ந்தன

1948 ம் வருஷம் டிசம்பர் மாசத்தின் இரண்டாம் நாள்.. வியாழக்கிழமை.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவை காலை ஒன்பதரை மணிக்குக் கூடியது..

அன்றைக்கு அடிப்படை உரிமைகளில், “பொது இடங்களில், பொது அமைதிக்கு பாதகம் வராத வகையில் ஆயுதம் தாங்காமல் கூடுவது” எனும் ஷரத்தினைக் குறித்த விவாதம் நிகழ்ந்தது..

இந்த விவாதத்தின் போது, அம்பேத்காரின் பெயர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம், அரசியல் சாசன சபையின் துணைத்தலைவர் ஹெச் சி முகர்ஜி குறுக்கிட்டு, “அரசியல் சாசன வரைவு கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவருமே இங்கே முன்னிறுத்தப்படும் ஷரத்துகளுக்குப் பொறுப்பானவர்கள்.. அதன்றி ஒவ்வொரு முறையும், வரைவு கமிட்டியின் தலைவரான நண்பர் அம்பேத்காரை மட்டும் விளித்து உறுப்பினர்கள் விமர்சிப்பது அத்தனை நல்லதாகத் தெரியவில்லை” என்று சொன்னார்

தனது பெயர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம்.. அம்பேத்கார் அமைதியாகவே இருந்தார்.. ஆயுதம் தாங்காமல் எனும் கட்டுப்பாட்டுக்கான காரணத்தினை விளக்கிச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.. சில சமயம் உறுப்பினர்கள் குறிப்பிட்ட் தகவல் பிழைகளை சுட்டிக் காட்டினார்

ஆனால் ஆயுதம் தாங்காமல் என்பது மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதிக்கும் எனும் கருத்து அவைக்கு வந்த போது, அம்பேத்கார் பேச எழுந்தார்

“துணைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.. இந்த பெர்சனல் சட்டங்கள் எனும் விவாதம் மீண்டும் ஒலிப்பது ஆச்சரியம். நாம் அரசின் வழிகாட்டும் நெறிகளை வரைவு செய்யும் போது, பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து மிகவும் விரிவாகப் பேசி விவாதித்திருக்கிறோம்.. அப்போதும் உறுப்பினர்கள் பொது சிவில் சட்டம் எப்படி அவரவர் மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதிக்கும் என்று சொன்னார்கள்.. அதற்கு போதுமான விளக்கங்களை நானும், முன்ஷி, நண்பர் அல்லாடி தந்து விட்டோம்.. இப்போது அடிப்படை உரிமைகளைக் குறித்து விவாதிக்கும் இந்த தருணத்தில் ,”மதங்களுக்கான பெர்சனல் சட்டங்கள்” எனும் விவாதம் மீண்டும் தலைகாட்டுகிறது

இப்படி நாம் மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதுகாக்க முனைந்து அதற்கென நமது அரசமைப்புச் சட்டத்தில், விலக்களித்து ஷரத்துகளைச் சேர்த்துக் கொண்டே போவோமானால் அது அரசமைப்புச் சட்டத்தினையே நீர்த்துப் போக வைக்கும் செயலன்றி வேறேதும் இல்லை. அது மட்டுமல்ல இந்தியாவில் நாடாளுமன்றம் மட்டுமல்ல மாநில சட்டமியற்றும் மன்றங்களும் எந்த சமூக முன்னேற்றம் சார்ந்த சட்டங்களும் நிறைவேற்றி செயல்படுத்த இயலாதன ஆகிவிடும் அபாயமும் உண்டு

பலவிதமான மதங்கள், இனங்கள் , பிரிவுகள் கொண்ட நமது பெரிய தேசத்தில் ஒவ்வொரு மனிதனும் பிறப்பது தொடங்கி, இறப்பது வரைக்கும் கணக்கில் அடங்காத வகைக்கு மதங்களுக்கு ஏற்ப நியதிகளும் சம்பிரதாயங்களும் இருக்கின்றன.. இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு, நாமும் ஒவ்வொரு மதம் அதற்கான பெர்சனல் சட்டங்கள் நியதிகளைப் பாதுகாக்க தொடங்கி, அரசமைப்புச் சட்டத்திலும் ஏனைய சட்டங்களிலும் விதி விலக்குகளும் சலுகைகளும் அமைத்துக் கொண்டே போனோமானல் அது பிற்காலத்தில் சமூக முன்னேற்றத்தினை முட்டுக்கட்டை போடும் என நான் தீர்மானமாக நம்புகிறேன்

நாடு சுதந்திரம் பெற்று, நாம் நமக்கென அரசமைப்பு அமைத்துக் கொள்ள ஒருங்கிணைந்து கூடி விவாதிக்கும் இந்தத் தருணத்தில் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா ?

மதம், அதன் நியதிகளுக்கு என ஓர் எல்லையினை நாமே நியமித்துக் கொள்ள வேண்டாமா.. அப்படி நாம் நம்மை ஒருங்கிணைத்துக் கொள்வது ஒன்றும் அசாதாரணமானது அல்ல

ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை,, நாம் நமக்கான அரசமைப்பினை வடிவமைத்துக் கொள்ள கூடி விவாதிக்கும் இந்த தருணத்தில் ஏன் மதம் எனும் பொருளுக்கு அங்கீகாரமும்,, அதற்கென அதிகார வரம்புகளும் கோருகின்றார்கள்

நாம் போராடி அடைந்திருக்கும் சுதந்திரம்.. இப்படி நாம் வேறுபட்டே நிற்போம் என்று கூடி சொல்வதற்காகவா.. நாம் அடைந்த் சுதந்திரம் இப்படியான சமூக சூழலை உருவாக்கிக் கொள்ளவா…

மதங்களும் அதன் பெர்சனல் சட்டங்ளும் மிகவும் முக்கியமெனில், இந்த சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் சபைகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்

குடியரசு என்பது மக்கள் தாங்களாகவே முன் வந்து தங்களுக்கான அரசு அமைத்து , அதற்கென சட்டங்களும் , விதிகளும் ஏற்படுத்திக் கொள்வது.. அதனால் உருவாகும் சட்டங்கள் மக்கள் மீது அரசு தனது கட்டுப்பாட்டினை செலுத்தும் அதிகாரம் மட்டும் கொண்டவை என்பது பொருளாகாது.. இதனை உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.. ஒரு சட்டம் பொதுவானது என செயல்வடிவம் பெறுவது பொது நன்மை எனும் அடிப்படையிலன்றி, எந்த ஒரு குறிப்பிட்ட சமூகம், இனம், மதம் இவற்றின் உணர்வுகளை, சம்பிரதாயங்களை பாதிக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்படுவதில்லை.. மதங்களின் பெர்சனல் சட்டங்கள், இந்தக் குடியரசின் சட்டமியற்றும் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் எனும் கருத்து உதயமாவதை நான் எதிர்க்கிறேன்”

இந்தக் கருத்துகளுடன் வேறுபல உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அம்பேத்கார் பதிலளித்தார்..

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு நான்கானது Directive Principles of State Policy அதாவது, அரசு தனது கொள்கைகளை வகுக்கும் போது பின்பற்ற தேவையான நெறிமுறைகள் எனும் அளவில் கொள்ளலாம்.. இந்த பிரிவில் ஷரத்து எண் 44 பொது சிவில் சட்டத்தினை கொண்டு வர அரசு தேவையான முயற்சிகளை செய்யும் என்பதாக அரசமைப்புச் சட்டம் நிறைவேறியது

இந்தப் பகுதி நான்கானது அடிப்படை உரிமைகள் போல Enforceable கிடையாது.. ஒரு வேளை நமது அரசமைப்பின் அடிப்படை உரிமையாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்குமேயாயின் பல நீதி மன்ற வழக்குகளில் அந்த ஷரத்து பெருமளவு பேசப்பட்டிருக்கும்

பொது சிவில் சட்டத்தினை ஓர் அடிப்படை உரிமையாக, அடிப்படை உரிமையின் ஷரத்தாக கொண்டுவர அரசமைப்பு வரைவுக்கான துணைக்கமிட்டியின் ஆரம்ப கட்ட முயற்சிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சந்திரமெளலீஸ்வரன் விஸ்வநாதன்