October 24, 2021

யோகா தினம் – ஐ.நா-தலைமையகத்தில் கோலாகலம்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இம்முறையும் ஐ.நா. தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரக் குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். இன்று- ஜூன் 20ம் தேதி ஐ.நா. தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு சுவாமி சித்தானந்த சரஸ்வதி தலைமை தாங்க உள்ளார். சாத்வி பகவதி சரஸ்வதி, சுவாமி சிவதாசானந்தா ஆகியோர் யோகா பயிற்சி அளிக்க உள்ளனர்.ஐ.நா. பாதுகாப்பு செயலாளர் மரியா லூய்ஸா ரிபெரோ, ஐ.நா. பொதுக்குழு தலைவர் பீட்டர் தாம்ஸன் ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இதையடுத்து ஜூன் 21ம் தேதி யோகாவால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்னும் தலைப்பில் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. இதில் உலக சுகாதார மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி நாதா மெனாப்தி, நடிகர் அனுபம் கெர் உள்பட பலர் பங்கேற்று பேசுகிறார்கள். யோகா தினத்தை முன்னிட்டு இம்முறை ஐ.நா. சிறப்பு தபால் தலைகளை வெளியிட உள்ளது. ஓம் மற்றும் யோகாசன நிலைகளின் வடிவங்கள் அந்த தபால் தலைகளில் இடம்பெற உள்ளன.

எகிப்தில் யோகா

சர்வதேச யோகா தினத்தன்று முன்னிட்டு எகிப்தில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்ஸாண்டிரியா, இஸ்மாலியா ஆகிய நகரங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக எகிப்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா தெரிவித்தார்.