October 16, 2021

ஐநா சபை அழியக்கூடிய வாய்ப்பு அதிகம்!-ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கவலை!

சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாக இருக்கும் ஐநாவின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் அதிகார பலத்தால் நாளை ஐநா சபை அழியக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜையத் ராத் அல்- ஹுசைன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருபவர் ஜையத் ராத் அல்- ஹுசைன். இந்த மாதம் தன் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜையத் நேற்று ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய ஐநாவின் 5 நிரந்தர உறுப்பினர்கள் இன்று ஐநாவின் அனைத்து செயல்பாடுகளையும்  கட்டுப்படுத்துகிறார்கள். அவர் களிடம் உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐநாவின் மற்ற உறுப்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை ரத்து செய்கிறார்கள். ஐநாவில் தாக்கல் செய்யப்படும் எந்த ஒரு தீர்மானமும் இந்த 5 உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இல்லை யென்றால் அந்த தீர்மானங்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் இங்கேயே சிக்கிக்கொள்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். இல்லையென்றால் நாளை ஐநா சபை முழுவதுமாக அழியும் காலம் உருவாகலாம்” என ஜையத் ராத் அல்- ஹுசைன் தெரிவித்தார்.

ஜோர்டான் நாட்டை சேர்ந்த ஜையத் ராத் அல்- ஹுசைன் அவரது நேர்மையான, வெளிப்படையான, பேச்சுக்கு பெயர் பெற்றவர். அவரது பேச்சுக்கு உலகளவில் பல மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் தன் நேர்மையான கருத்துகளால் பல அரசுகளின் கண்டனத் தையும் ஜையத் பெற்றுள்ளார்.ஜையத் ராத் அல்- ஹுசைன் ஓய்வு பெற்றதும் சிலியாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் பாச்சிலெட் ஐநா மனித உரிமை ஆணையராக செப்டம்பர் மாதம் பதவி ஏற்கிறார்.