April 2, 2023

விஜய் மல்லையாவை கடத்திட்டு போகலா: ஆனா ..? லண்டன் அமைச்சகம் போட்ட தடை!

நாலைந்து வங்கிகளின் கடன் வாங்கி மோசடி செய்து சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கூடவே அவர் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.

‘கிங் பி‌ஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62). இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

நாடுகடத்தல் ஒப்பந்த நடைமுறைகளின் படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்படவேண்டும், அவர்தான் இது குறித்த உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் உடையவர்.

இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட பிரிட்டனின் மூத்த பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் சாஜித் ஜாவித் கையெழுத்திட 2 மாத கால அவகாசம் இருந்தது.

பிரிட்டன் உள்துறை அலுவலகம் இன்று கூறும்போது,”இந்தியாவில் விஜய் மல்லையா மீது மோசடி வழக்கு மற்றும் நிதிமோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி உள்துறை செயலாளர் ஜாவித் இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனமாக பரிசீலித்து விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கையெழுத்திடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.