October 18, 2021

ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சவால் விடாதீங்கோ

பலத்த சர்ச்சையாகி விட்ட நிலையில் யாரும் ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் பதி  விட்டு மற்றவர்களுக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பொது மக்களை ஆதார் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

ட்ராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என சவால் விடுத்தார். இதனையடுத்து அவரது பல்வேறு தகவல்களை ஹாக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகளால் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதளம் உள்ளிட்ட பொதுவெளியில் ஆதார் எண்களை பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொது வெளியில் வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள ஆதார் ஆணையம், அரசின் சேவைகளையும் பலன்களையும் பெறுவதற்காக மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டை போல ஆதார் எண்ணும் ஒருவரின் தனிப்பட்ட விவகாரமாகும். அதனை பகிர ஆதார் ஆணையம் சட்டம் 2016ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பகிர்வது தனிப்பட்ட நபரை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மற்றவர்களின் ஆதார் எண்ணை தங்கள் அடையாளத்திற்காக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்க்து.