November 29, 2022

இளநிலை படிப்புகளுக்கு சேருவோருக்கு தனி நுழைவுத்தேர்வு – யுஜிசி அறிவிப்பு

ந்த கல்வியாண்டு முதல் மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுசிஜி தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண், வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு போல, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட உள்ளது.மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே போதாது, சி.யூ.இ.டி. எனப்படும் சென்ட்ரல் யுனிவர்சிட்டி எலிஜிபிளிட்டி டெஸ்ட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று யுஜிசி சேர்மன் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த யுஜிசி சேர்மன் ஜெகதீஷ் குமார், 2022 –23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும். இளநிலை, முதுநிலை படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசியின்) கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இவை அனைத்திலும் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12ம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

பிரிவு 1ஏ, பிரிவு 1பி பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு என நுழைவுத் தேர்வு வடிவமைக்கப்படும்.

பிரிவு 1ஏ–வில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் இருக்கும். பிரிவு 1பி என்பது ஆப்ஷனல் தேர்வு. பிற மொழிகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கான ஆப்ஷன் அது. இதன் கீழ் மாணவர்கள் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் போன்ற மொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.

டொமைன் ஸ்பெசிப் எனப்படும் குறிப்பிட்ட பாடவாரியான ஆப்ஷனில் மாணவர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்யலாம். அதாவது அவர்கள் இளநிலையில் படிக்க விரும்பும் ஏதேனும் 6 பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில் வரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர முடியும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் கட் ஆப் நிர்ணயிக்கப்படும். ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பின்னடைவும் வராது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த தேர்வால் அனைத்து கல்வி வாரியங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சமவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கல்விக் கொள்கையின் சாரம்சத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.