காலேஜ் புள்ளீங்க. புள்ளைங்க எல்லாரும் கதர் & கைத்தறி ஆடை அணியோணும்1

காலேஜ் புள்ளீங்க. புள்ளைங்க எல்லாரும் கதர் & கைத்தறி ஆடை அணியோணும்1

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் மாணவ- மாணவிகள் கதர் மற்றும் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நம் நாட்டைப் பொறுத்த வரை உழவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக இந்த நெசவுத்தொழில் இருந்து வருகிறது. இந்திய நாடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நெசவுத்தொழிலில் பல நுட்பங்களை புகுத்தி, உற்பத்தியில் தலை சிறந்து விளங்கியது. உள்நாட்டு விற்பனைபோக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

பருத்தி நெசவு, பட்டு நெசவு, கம்பளி நெசவு என எல்லா வகை நெசவு முறைகளும் இந்திய நாட்டில் நன்கு நிலை பெற்று இருந்தன. இந்தியா என்பது ஒரு பரந்த நிலப்பரப்பு என்பதால் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப பல வகையான நெசவு முறைகள், ஆடை வடிவமைப்புகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கி பல்வேறு வெளிநாட்டு வணிகர்களும் இங்கு வருகை தந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இங்கு நெய்யப்பட்ட கைத்தறி ஆடை வகைகளே. இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகளில் இந்த கைத்தறி ஆடைகள் முக்கிய ஏற்றுமதிப்பொருளாக விளங்கி வந்தது.

ஆனால் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்தியாவின் கைத்தறித்தொழிலை தலைகீழாக புரட்டிப்போட்டது. நவீன நெசவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பஞ்சாலைகள் நவீன மயமாக்கப்பட்டன. இதனால் இலட்சக்கணக்கான கைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்த தால், அவர்களின் வாழ்வா தாரம் அழிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பஞ்சாலைகள் தொடங்கப்பட்ட அதே நேரத்தில் பல ஆயிரம் கைத்தறிகள் செயலிழந்து போயின. இந்த சமயத்தில்தான் மகாத்மா காந்தி இராட்டை எனும் ஆயுதத்தை கையில் எடுத்து கதரை ஆதரிக்கத் தொடங்கினார். இதையடுத்து கைத்தறி மீண்டும் உயிர் பெறத் தொடங்கியது.

இந் நிலையில்தான் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். அதில், காந்தியின் 150-வது பிறந்ததினத்தை முன்னிட்டு கதர் தொழிலை மீட்டெடுக்க அனைவரும் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக, கல்லூரி மாணவ, மாணவியர் தங்களது சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது கதர் அல்லது கைத்தறி ஆடைகள் அணிய முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. கதர் ஆடைகள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கி, கதர் மற்றும் கைத்தறி தொழிலை மீட்டெடுக்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!