காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்!

கோலிவுட் என்றழைக்கப்படும் நம்ம தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும் மன்னராக விளங்கியவர் உடுமலை நாராயண கவிராயர். அந்நாளில் தமது பாடல்களால் தான் பிறந்த உடுமலைப்பேட்டைக்கே ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இதே 25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி (தற்போது பூளவாடி) கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ் பெற்ற இவர், ‘நாராயண கவி’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தான் கவிஞர் இனமென்று அடையாளம் வைத்தார்.

தமது 5 ஆவது வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். 12 ஆவது வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய், தந்தையரின் இறப்பிற்குப் பின்னர் தமது உறவினர் வீட்டில் வளர்ந்தார். கைத்தொழில்கள் புரிந்தும், சிறு சிறு வியாபாரங்கள் செய்தும் பொருளீட்டினார். சிறு வயதிலேயே இசையார்வம் மிகக் கொண்ட கவிஞர், உடுமலை சரபமுத்துச்சாமிக் கவிராயர் ஆசிரியராக இருந்த ஆரிய கான சபையில் சேர்ந்து நாடகக் கலைஞராக விளங்கினார். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடன்றி, அவரின் உதவியால் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கலையை முறையாகக் கற்றார்.

இந்த நேரத்தில் நாராயண கவிக்கு, பேச்சியம்மாளுடன் திருமணம் நடந்தது. போதிய வருமானம் இல்லாத நிலையில் வறுமைக்கு ஆளானது. ஒரு நாள் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் மதுரைக்குச் சென்றுவிட்டார். அங்கு மதுரையில் நாடகக் கலைஞர் எம்.எம்.சிதம்பரநாதன் அவர்களுடன் நாடகக் கலையில் தொடர்பு கொண்டார். அங்கு மதுரையில் இருந்த நாடகக் குழுக்களுக்கு மேடை நாடகப் பாடல்களை எழுதிக் கொடுத்தார். அவரது துணைவியார் குழந்தைகளுடன் மதுரை சென்று கவிராயரை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் கிராமஃபோன் கம்பெனியிலிருந்த நாராயண ஐயருடைய அறிமுகம் ஏற்பட்டது. நாராயண ஐயருடன் சென்னைக்குச் சென்றார். அவரின் உதவியினாலேயே கிராமஃபோன் இசைத்தட்டுக் கம்பெனிக்குப் பாடல்களை எழுதிக்கொடுக்கத் துவங்கினார். இவரின் கவித்திறமையைக் கண்ணுற்ற திரைப்பட இயக்குநர் ஏ.நாராயணன், இவரைத் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழிதிடச்செய்தார். அந்நாட்களில் தமிழ்த் திரைப்படங்கள் பல கல்கத்தாவிலேயே தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் கல்கத்தா சென்று ‘கிருஷ்ணன் தூது’ படத்திற்குப் பாடல்களை எழுதினார். இதேபோல் கல்கத்தா ராயல் டாக்கீஸ் தயாரிப்பான ‘தூக்கு தூக்கிக்கு’ கதை, வசனம், பாடல்களை எழுதினார். 1936 இல் பல நாடகங்களுக்கு இவருடைய பாடல்கள் சிறப்பைக் கொடுத்தன. பின்னர், ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘நல்ல தம்பி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பிரபாவதி’, ‘காவேரி’, ‘சொர்க்கவாசல்’, ‘தூக்கு தூக்கி’, ‘தெய்வப்பிறவி’, மாங்கல்ய பாக்கியம், ‘சித்தி’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘ஆதி பராசக்தி’, ‘தேவதாஸ்’ போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர்களுக்கு பல தனிப் பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

மக்களிடையே இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டின. தொடக்கத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயண கவிராயர், மகாகவி பாரதியாரின் நட்பிற்குப் பிறகு சமுதாயப் பாடல்களை எழுதத் துவங்கினார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, நாராயண கவிராயர் ஆஸ்தான கவிஞரானார். கலைவாணருக்காக கவிஞர் எழுதிய ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் மிகவும் புகழ் பெற்றது.

மகாகவி பாரதியாருடைய நண்பர் வ.ரா., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோர்களுடன் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அவரது காலத்திலிருந்தே அனைத்து அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.

இயல்பாகவே இனிமையான சுபாவம் படைத்த கவிராயர், நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும், தலை வணங்காத உறுதியுடையவர். பிறருக்கு என்ன உதவியாயினும், செய்யக்கூடியவர். அவருடைய சிறப்பான பாடல் திறத்திற்கு சில சான்றுகள்:

மாங்கல்ய பாக்கியம் படத்தில்

ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்

என்றே தேறுவது அறிவாகும் அது

நன்றேயாகுமென உணர்ந்திடாது-

மக்கள் உன்றே கூறுவது தவறாகும்……

தூக்கு தூக்கி படத்தில்

1-குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,

2-பெண்களை நம்பாதே- கண்களே பெண்களை நம்பாதே

3-சுந்தரி சௌந்தரி நிரந்தரியே……

தெய்வப்பிறவி படத்தில்

அன்பாலே தேடிய என் அறிவுச் செல்லம் தங்கம்……..

எங்கள் வீட்டு மகாலெட்சுமி படத்தில்

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு சேர்க்கலாமடி….

திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும், புகழையும் வைத்திருந்தார். இவரது பாடல்களில் பழமையின் வலிமை, புதுமையின் எளிமை, கவிதையின் இனிமை, கருத்தின் பெருமை, இசையின் எளிமை, இசையின் செம்மை, தமிழின் கவித்தன்மை- முதலிய அனைத்து அம்சங்களும் அமைந்திருந்தன.

திரையுலகிலும் கலைத்துறையிலும் தனக்கென ஒரு இடம் பெற்றிருந்த நாராயண கவி 1979 இல் தம்முடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்தார். கலைத்துறையிலிருந்து முற்றிலும் விலகி, தமது அமைதியான வாழ்க்கையைப் பூளவாடி கிராமத்தில் தொடர்ந்தார். ‘உடுமலை’ என்கிற பெயருக்குப் பெரும் புகழையும், ஒரு தனி முத்திரையையும் தந்த அந்த கவிஞர் தனது 82 ஆவது வயதில் 1981 ஆம் ஆண்டு காலமானார்.

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

5 hours ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

7 hours ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

11 hours ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

12 hours ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

15 hours ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

1 day ago

This website uses cookies.