June 26, 2022

இளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன்!- உதயநிதி பேச்சு முழு விபரம்-வீடியோ!

திமுக இளைஞர் அணியில் 15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப் படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது. இப்போது திமுகவில் இளைஞர்கள் இல்லை என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. திமுகவில் இளைஞர்கள் இல்லாமலா கருணாநிதியின் மறைவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வந்தனர்? என திமுக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் வினவினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இளைஞரணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 25) சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இளைஞரணி துணைச் செயலாளர்களான ஆர்.டி.சேகர், ப.தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டதில் 450-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மறைந்த தி.மு.க முன்னோடிகளுக்கும், கேரளா, நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். பின்னர் இளைஞரணியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது “வணக்கம். மீண்டும் ஒருமுறை உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களின் வரவேற்பு, ஆரவாரங்களைப் பார்க்கையில் நண்பர்களுடன் இருப்பது போன்ற ஓர் உணர்வு. நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சென்ற என்னை வழிநெடுகிலும் வரவேற்றீர்கள். உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது. தலைவரின் சாதுர்யம், கழக நிர்வாகிகளின் களப்பணி, முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் கடும் உழைப்பு என இந்தக் கூட்டு முயற்சியால் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் இளைஞரணி செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டக் கழக செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பினர். அதைத் தொடர்ந்து நம் இனமான பேராசிரியர் அவர்களும், தலைவர் அவர்களும் இந்தப் பொறுப்பை நமக்குத் தந்தனர். இந்தப் பொறுப்பை ஏற்கையில் மகிழ்ச்சியை விட தயக்கமே எனக்கு மேலோங்கி நின்றது. ‘நம் இளைஞரணியினரின் மனநிலையுடன் என் மனநிலை பொருந்திப்போகுமா’என்ற தயக்கம்தான் அதற்குக் காரணம். அந்தத் தயக்கத்தை உடைத்ததே நீங்கள்தான். என்னை உங்களின் அண்ணனாக, நண்பனாக, தம்பியாக, உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதை உங்கள் தொடர் அன்பினால் உணர்த்தினீர்கள், உணர்த்திக்கொண்டே இருக்கிறீர்கள். உங்களுடன் பணிபுரிவதையே பெருமையாகக் கருதுகிறேன்.

கழகத்தில் இளைஞரணி முக்கியமான அமைப்பு என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம். இதேபோல, ‘இந்திய அரசியல் கட்சிகளிலேயே கட்டமைப்பில் பலமானது நம் கழகம்’ என்பதும் உங்களுக்குத் தெரியும். இவ்வளவிற்கும் 2011-ல் இருந்து தமிழகத்தில் நாம் ஆட்சியில் இல்லை. 2014-ல் இருந்து மத்தியில் நாம் பெங்குபெறாத ஆட்சிதான் நடந்துவருகிறது.

ஆனாலும் இங்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலமான எதிர்க்கட்சியாகவும், மக்களவையில் 25 உறுப்பினர்கள் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாகவும் நாம் திகழ்கிறோம். இது எல்லா வற்றையும்விட ஆட்சி செய்கிறவர்களே மக்களிடம் இருந்து விலகி இருக்கையில் நாம் மக்களுடன் நெருக்கமாக, அவர்களின் பிரச்னைகளை புரிந்து, தேவைகளை உணர்ந்து செயல் படுகிறோம். நாம் ஆட்சியில் இல்லை என்ற ஒரு குறையைத்தவிர மற்றபடி நம் பணியை அழகாக நிறைவாக செய்து வருகிறோம்.

ஆனால் இன்று, நாம் ஆட்சிக்கு வரவேண்டியது என்பதைத்தாண்டி நாடே ஆபத்தான ஒரு சூழலில், அதாவது இருண்ட காலக்கட்டத்தில் உள்ளது. ஒரே நாடு, ஒரே கட்சி என்ற அடாவடி அரசியலை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு செய்து வருகிறது.

தரம் தாழ்ந்த அரசியலின் மூலம் மற்ற கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு தொடர்ந்து குடைச்சலைக்கொடுத்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியையே கலையவைத்தது. மேற்கு வங்கம், புதுச்சேரி உள்பட பல மாநிலங்களை சுயமாக இயங்கவிடாமல் தொல்லைகள் கொடுத்து வருகிறது. இப்படி கூட்டாட்சி தத்துவத்தை காலில் போட்டு மிதித்து, ஜனநாயகத்தை கேலிக்குள் ளாக்கும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. ஆனாலும் தமிழ்நாட்டை மட்டும் அவர் களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. இவ்வளவுக்கும், மோடியின் அடிமைகள் இங்கே ஆட்சி செய்யும்போதுகூட அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை.

அதனால், ‘எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அழிக்க நினைப்பதுபோல், தனக்கு மக்கள் ஆதரவு இல்லாத தமிழகத்தை சீரழிக்க பாஜக  முடிவு செய்து விட்டது. எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், நீட்-நெக்ஸ்ட், புதிய கல்விக்கொள்கை, பொருளா தாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, சேலம் இரும்பு உருக்காலை தனியார் மயம். இப்படி தமிழகத்தை மையப்படுத்திய ஏகப்பட்ட மக்கள் விரோதத் திட்டங்களை அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அவர்களின் மக்கள் விரோதச் செயல்களை நம் கழகமும், பொது மக்களும் எதிர்த்து நிற்கும்போது, இங்குள்ள அடிமை அரசைவைத்து மிரட்டல் விடுக்கின்றனர். குருவியைச் சுட்டுக்கொல்வதுபோல தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடே அதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.

பெரியார், அண்ணா, கருணாநிதி. இந்தத் திராவிடத் தலைவர்கள் தங்கள் சமூக நீதி கருத்துகளையே நமக்கு உரமாக்கி வளர்த்ததாலும் நம் தலைவரின் களப்பணியாலும் பா.ஜ.க.வால் தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. இன்றல்ல, என்றுமே வெல்லமுடியாது என்பதுதான் நிதர்சனம்.

இப்படி அனைத்து வழிகளும் தோல்வியுற்ற பாஜக, பிரிட்டீஷ்காரன் கையிலெடுத்த அந்த சூழ்ச்சியை கடைசி ஆயுதமா கையிலெடுத்துள்ளது. அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி.சாதி, மதம் என மக்களைப் பிரித்து மோதவிட்டு, இங்கே தன்னை பலப்படுத்த நினைக்கிறது. ‘நமக்கு கான்ட்டிராக்ட் கமிஷன் வந்தால் போதும், எவன் செத்தால் என்ன’என இங்குள்ள மோடியின் அடிமைகளும் அமைதிகாக்கிறார்கள். ஆனால், இந்த பிரிவினைவாத சக்திகள் இந்த மண்ணில் வேர் விடாது என்பதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோத ஆட்சி நடத்தும் பா.ஜ.க, ‘இந்து மத விரோதி’என்று நம்மைப் பார்த்து சொல்கிறது. பெரும்பான்மையான தமிழக இந்துக்கள் வாக்களிக்காமலா திமுகவில் இத்தனை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருக்கிறார்கள்? ஆக, மக்கள் தெளிவாக உள்ளனர். ஆனால் பா.ஜ.க.வினரும் இந்த அடிமைகளும் மக்களை குழப்பி அதில் மீன்பிடிக்க நினைக்கின்றனர். இவர்களின் இந்த சூழ்ச்சியை மக்களுக்கு புரியவைத்து அவர்களை இன்னும் தெளிவடையவைக்கவேண்டியது நம் கடமை.

‘பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்க மாட்டோம்’என்று அறிஞர் அண்ணா சொன்னதுதான் எங்கள் கொள்கை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்.அதேநேரம், சிறுபான்மையினருக்கு இங்குள்ள பெரும்பான்மையினர்தான் பாதுகாப்பு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இதுநாள்வரை அப்படித்தான் இருக்கிறோம், இனியும் அப்படித்தான் இருப்போம். அதை உணர்த்தும்வகையில் நாம் செயல்படவேண்டும்.

அதற்கு நமக்கு மிகப்பெரிய சக்தி வேண்டும். ஆம், இளைஞர்களின் சக்தி வேண்டும்!. அந்த சக்தி நமக்கு இல்லையா? ‘திமுக-வில் இளைஞர்கள் இல்லை’என்ற ஒரு பிரச்சாரமும் செய்யப்படுகிறது. திமுகவில் இளைஞர்கள் இல்லாமலா கருணாநிதியின் மறைவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வந்தனர்?

ஆமாம், இளைஞர்கள் என்றும் நம்மோடுதான் இருக்கிறார்கள். அதை நம் எதிரிகள் உணர்ந்திடும் வகையில் அவர்களை ஆக்கப்பூர்வமாக அணிதிரட்ட வேண்டும். இளைஞர்களுக்காக நம் அரசு வகுத்த திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது. கல்வி வாய்ப்புகளை உருவாக்க, அறிவை விசாலமாக்க, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர. இப்படி, இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டியதையும், இளைஞர்களின் வளர்ச்சிக்காக என்றைக்கும் திமுக முன் நிற்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இனி, நம் ஒவ்வொருவருடைய செயல்பாடும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  கழக அரசு செய்த இமாலய சாதனைகளை, மக்களை பிரித்தாள நினைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சியை, ஈபிஎஸ்-ஓபிஎஸ்ஸின் அடிமை ஆட்சியை. அனைத்தையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அவர்களை நம் பக்கம் ஈர்க்கவேண்டும்.

அதுதான் உங்கள் முன் உள்ள முக்கியமான களப்பணி. அதை செய்துவிட்டால் தமிழகத்தில் ஆட்சி நம் கையில், நம் தலைவர்தான் அடுத்த முதல்வர். நீங்கள் இதை செய்வீர்களா? செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்கள் அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும்”என்று பேசினார்.

இதை அடுத்து இந்நிகழ்வில் எடுத்த புகைப்படத்தை தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், ”குடும்ப அரசியல் என்பார்கள். ஆம், இதுதான் என் குடும்பம்” என குறிப்பிட்டுள்ளார்.