அமீரகம்: மதம் மாறி மணமுடித்த தம்பதியரின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கியாச்சு!

சகிப்புத்தன்மைக்கு முன்னுதாரன தேசமாக திகழும் முனைப்புடன் 2019ம் ஆண்டினை சகிப்புத் தன்மை ஆண்டாக அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம். வெவ்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய மக்கள் ஒவ்வொருவரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்த சகிப்புத்தன்மை ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக என்று கூட சொல்லும் வண்ணம் இந்தியர்களான இந்து தந்தைக்கும் – முஸ்லிம் தாய்க்கும் பிறந்த பெண் குழந்தைக்கு, எமிரேட்ஸ் எனப்படும் ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) நாட்டில், முதல் முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மிகுந்த கட்டுபாடுகள் நிறைந்த எமிரேட்ஸ் நாட்டில் குடியேறி வாழும் வெளிநாட்டவர்களுக்கான திருமண விதிகளைப் பொறுத்தவரையில், ஒரு முஸ்லிம் ஆண் முஸ்லிம் அல்லாத பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்து இளைஞர் கிரன் பாபுவும், முஸ்லிம் பெண் சனம் சபூ சித்திக்கும் கடந்த 2016-ல் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எமிரேட்ஸை சேர்ந்த ஷார்ஜாவில் வாழ்கின்றனர்.

அவர்களுக்கு கடந்த 2018 ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது. அதிலிருந்து அவர்கள் ஒரு வித்தி யாசமான சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த தந்தைக்கும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த குழந்தை என்பதால் விதிகளின்படி பிறப்பு சான்றிதழ் அளிக்க முடியாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.அது குறித்து “எனக்கு அபு தாபி விசா இருக்கிறது. பிரசவத்துக்காக என்னுடைய மனைவியை துபாயில் உள்ள மெடியோர் மருத்துவமனையில் சேர்த்தேன். ஆனால், குழந்தை பிறந்த பிறகு, தந்தையான நான் இந்து என்பதால் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். “பிறகு, தடையில்லை சான்று கோரி நீதிமன்றத்தின் மூலமாக விண்ணப்பித்தேன். 4 மாத விசாரணைக்குப் பிறகு அங்கும் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’’ என்று கிரன் பாபு தெரிவித்தார்.

ஆனாலும் அவருடைய மகளுக்கு சட்ட ஆவணம் ஏதும் இல்லாத நிலையில், பொதுமன்னிப்பு காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். அப்போதுதான் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் நாடு என்பதை வெளிக்காட்டுவதையும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே இடைவெளியை அகற்றி உறவுப் பாலம் அமைப்பதையும், ஒவ்வொருவரும் அடுத்தவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை ஏற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு 2019-ம் ஆண்டை சகிப்புத் தன்மை ஆண்டு என எமிரேட்ஸ் நாடு அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில், அங்குள்ள இந்தியத் தூதரகம், ஒரு அவுட் பாஸ் வழங்கி உதவி செய்தது. ஆனால், குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தும் பதிவு எண்ணோ, வேறு விவரங்களோ இல்லாத காரணத்தால் குழந்தைக்கு குடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது. கிரன் பாபுவின் இந்த முயற்சிகள் அனைத்துக்கும் இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆலோசகர் ராஜமுருகன் மிகவும் உதவியாக இருந்தார்.

இந்நிலையில், கிரன் பாபு-வின் பிரச்சினையை ஒரு விதிவிலக்காக நீதித் துறை ஏற்றுக் கொண்டது. அதை விசாரித்த கோர்ட் இனிமேல், இதுபோன்ற பிரச்சினைகளில், ஒரு வேண்டுகோள் கடிதம் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் சுகாதாரத் துறையிடம் கொடுத்து பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கிரன் பாபு மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இந்த முறை அவருக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது.

ஆக கிரன் பாபு – சனம் சபூ தம்பதியின் குழந்தையான அனம்தா அசெலின் கிரனுக்கு ஏப்ரல் 14-ம் தேதி, மலையாள புத்தாண்டு தினமான விஷுவுக்கு முந்தைய நாளில், பிறப்புச் சான்றிதழ் கிடைத்தது.விதிகள் திருத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டது என கிரன் பாபு மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதே சமயம்வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நீதிமன்ற தீர்ப்பு, வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என இந்தியத் தூதரக அதிகாரி ராஜமுருகன் பெருமை பொங்கக் குறிப்பிட்டார்.