U19T20 WorldCup: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு 5 கோடி பரிசு!

U19T20 WorldCup: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு 5 கோடி பரிசு!

ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு என்று BCCI செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு .

19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல, சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. முதன் முறையாக, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது, நாட்டிற்கு பெருமையாக பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து அணியை தோற்கடித்து, இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இன்றைய ஆட்டம் சென்வெஸ் பார்க் ஆடுகளத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசினர். 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் ஒருவர் கூட 20 ரன்களை கடக்கவில்லை. 6 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அதில் இருவர், ‘டக் அவுட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய இலக்கை நோக்கி இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீராங்கனைகள் விரைந்து முதல் இரு விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்வேதா செஹ்ராவத் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இந்திய கேப்டன் ஷஃபாலி வர்மா 11 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் எளிய ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் சவுமியா திவாரி மற்றும் கோங்காடி த்ரிஷா பொறுமையாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் 29 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த கோங்காடி த்ரிஷா தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் சவுமியா திவாரி 37 பந்துகளில் 24 ரன்களுடனும், ஹரிஷிதா பாபு ரன் எதுவும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தனர். 14 ஓவரில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி.

ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது இந்திய மகளிர் அணி. இதை அடுத்து இந்த அணிக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று BCCI செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்

error: Content is protected !!