April 17, 2021

அமெரிக்கா: ஹெச் 1 பி & ஹெச் 4 விசா-வுக்காக தடை நீக்கம்!

அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இப்படி அமெரிக்கா சென்ற ஊழியர்களின் கணவன்/துணைவிக்கு ஹெச்4 விசா வழங்கப்படும். எனினும், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு விசா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க பல்வேறு விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அதன்படி வெளிநாட்டினரில் ஹெச்1பி விசா தாரர்களின் கணவன் அல்லது மனைவிக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான உரிமையை வழங்கும் ஹெச்4 விசா திட்டத்தை தடை செய்ய உத்தரவிட்டார்.

இந்தத் தடையை சட்டப்பூர்வமாக்க ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக இருந்தது. இதற்கான முயற்சிகள் இறுதிக் கட்டத்தில் இருந்த நிலையில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற நிலையில், ட்ரம்ப் கொண்டு வந்த ஹெச்4 விசாவுக்கான தடை முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பைடன் நிர்வாகம். இதன்மூலம் ஹெச்1பி விசாதாரர்களின் இணையர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, ‘‘ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த ஹெச்4 விசா தடையால் திறமையான டாக்டர்கள், இன்ஜினீயர்கள் போன்ற பலரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியானது. குறிப்பாக பெண்கள். கடந்த ஆண்டே ஹெச்4 விசா தடையை ரத்து செய்யுமாறு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் போராடினோம். தற்போது புதிய அரசு பொறுப்பேற்று தடை நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.