December 1, 2021

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமே வீடு தான்!- ஐ.நா. ஆய்வு தகவல்!

பெண் ஒருவர் சரியாக இருந்து விட்டாலே வீடும் சரியாக இருக்கும் என்று பரவலான கருத்து நிலவுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கை என்ற தேரை சரியான பாதையில் செலுத்துபவளே பெண் தான் என்றும் குடும்பத்தின் குத்து விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்பு படுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமே வீடு தான் என்று ஐ.நா. தனது ஆய்வில் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு சர்வதேச அளவில் பெண்கள் தங்களின் கணவனாலும், தங்களின் பெற்றோர், சகோதரர் களால் ஆணவக் கொலையாலும், வரதட்சணைப் பிரச்சினையால் உறவினர்களாலும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளதால், பெண்கள் வாழ்வதற்கு வீடு ஆபத்தான இடம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பெண்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நடந்த வன்முறைகள் குறித்த அறிக்கை யை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இந்தப் பெண்கள் அனைவரும் அவர்களின் கணவரால், அல்லது முன்னாள் கணவரால்அல்லது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சிக்குரியதாகும்.

குறிப்பாக கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 137 பெண்கள், ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் தங்களின் குடும்ப உறுப்பினரால், பெற்றோரால், கணவரால் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஆண்களால் தாங்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை #மீடு இயக்கம் மூலம் பெண்கள் வெளிக்கொண்டு வந்தனர். அவ்வாறு இருந்தும், இன்னும் பெண்கள் தங்களின் பெற்றோர், கணவரால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

மேலும் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டுக்கு இடையே பெண்கள் தங்களின் கணவர் கள், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப் பட்ட விகிதாச்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. பெரும் பாலும் தங்களின் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதிமாறி செய்யப்படும் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலையாலும் கொல்லப்படுகிறார்கள்”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.