October 24, 2021

இரட்டை இலை சின்னம்: இபிஎஸ் & ஓபிஎஸ் ஆகிய இரட்டையர் தரப்புக்கே! – டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு!

கிட்டத்தட்ட ஒரு வருட விசாரணைக்குப் பின்னர் எம்.ஜி.ஆர். கண்டெடுத்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் என்னும் இரட்டையர் தரப்பிலான அ.தி.மு.க.வுக்கே என டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்துவிட்டது. மேலும் இது குறித்து டிடிவி தினகரன், சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது . இதையடுத்துதினகரன் தரப்பினர் மற்றும் சசிகலா தரப்பினர் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. அப்படி இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. அதே சமயம் சசிகலா – டிடிவி தினகரன் தரப்பு புறக்கணிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா – தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒன்றாக சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கியது.

இதன் பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் கமி‌ஷன். ஆனால் அப்படி அதிரடியாக உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்சுரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ். வைத்தியநாதன், கே.வி. விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் பிப்ரவரி 8–ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் டெல்லி ஐகோர்ட்டில் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அதன்படி இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோர் கொண்ட இருவர் அணி தரப்பான அ.தி.மு.க.வுக்கே வழங்கியது சரிதான் என டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்சுரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மதியம் தீர்ப்பு அளித்து உள்ளது.

அத்துடன் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பழனிசாமி மகிழ்ச்சி

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே என்ற தீர்ப்பு குறித்து திருப்பூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

இரட்டை இலை சின்னம் சம்பந்தமாக நல்ல தீர்வு, நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

நாங்கள்தான் உண்மையான அதிமுகவினர் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் முதலமைச்சர் பழனிசாமி.