நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட்

நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட்

சமூக ஊடகப் பயனாளிகள் பலரும் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் அவற்றைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என ட்விட்டர் குறும்பதிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

tweet survey

இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. அது மட்டுமல்ல; சமூக ஊடகங்கள்தான் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான பிரதான வழியாகவும் உள்ளன. இளம் தலைமுறையினர் மத்தியில் தொலைக்காட்சியைவிட, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களே செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான முக்கிய வழிகள். இந்த உண்மையை நம்முடைய பேஸ்புக் அல்லது ட்விட்டர் டைம்லைனைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் செய்திகள், கட்டுரைகளை டைம்லைனுக்கு அருகே இடம்பெற வைத்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இணையத்தில் செய்திகளைத் தெரிந்துகொள்ளத் தேடல்தான் பிரதான வழி. ஆனால் 2014-ல் நிலைமை மாறியது. சமூக ஊடகங்கள் வாயிலாக 30 சதவீத செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சமூக ஊடகங்களில் செய்திகள் தொடர்பாகப் போதுமான புரிதல் இல்லை. அதாவது சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் எவ்வாறு வாசிக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை.

இந்த நோக்கில் முதன்முறையாக நடத்தப்பட்டுள்ள ஆய்வை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு நேஷனல் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தியுள்ளன. இந்த ஆய்வுக்காகச் செய்தி இணைப்புகளைக் கொண்ட 28 லட்சம் டிவிட்டர் குறும்பதிவுகள் ஒரு மாத காலம் பரிசீலிக்கப்பட்டன. அவை எந்த அளவுக்கு கிளிக் செய்யப்பட்டன, அதாவது வாசிக்கப்பட்டன என ஆய்வு செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி இணைப்புகளில் 59 சதவீதம் படிக்கப்படுவதே இல்லை என அது தெரிவிக்கிறது. சமூக ஊடகப் பயனாளிகள் செய்திகளைப் படிக்காமலே அவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

“ மக்கள் ஒரு செய்தியை வாசிப்பதைவிட அதைப் பகிர்ந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’ என்று ஆய்வாளரான ஆர்னாட் லெகாட் கூறியுள்ளார். நம் கால இணையப் பழக்கம் பற்றி லெகாட் மேலும் கூறும் விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. ‘மக்கள் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்ள முயலாமலே, சுருக்கம் அல்லது சுருக்கத்தின் சுருக்கத்தைக் கொண்டே முடிவுக்கு வருகிறார்கள்” என்கிறார் அவர். எனவே ஒரு செய்தி வைரலாகப் பரவுவது அதன் பிராபல்யத்தை உணர்த்தலாமே தவிர, அதன் தாக்கத்தைக் குறிப்பதாகக் கருத முடியாது.

இணையத்தில் வைரலாகப் பரவும் செய்திகளை அடையாளம் காட்டும் பஸ்பீட் போன்ற சர்வதேசச் செய்தித் தளங்களும், ஸ்கூப்வூப் போன்ற இந்தியச் செய்தித் தளங்களும் சுண்டியிழுக்கும் வகையில் அவற்றுக்குத் தலைப்புகளைக் கொடுப்பதன் ரகசியம் இதுதான். ஆனால் இந்தத் தலைப்புகள் பகிரத் தூண்டுகின்றன, ஆனால் படிக்க வைக்கின்றனவா? எனும் கேள்வியை இந்த ஆய்வு எழுப்பியுள்ளது. ஊடகங்கள் பகிரும் செய்திகளைவிட, பயனாளிகள் பகிரும் செய்திகள் அதிகம் பகிரப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பழக்கம் அரசியல் மற்றும் கலாச்சார விஷயங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நாம் நினைப்பதைவிட அதிகமாக இருக்ககும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

செய்திகளை வாசிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் அதிகத் தொடர்பில்லை என்றும் இந்த ஆய்வின் அடிப்படையில் லெகாட் கூறுகிறார். இந்த இடத்தில் தி சயன்ஸ் போஸ்ட் இணையதளம் ஜூன் 4 -ம் தேதி வெளியிட்ட செய்தியைப் பொருத்திப் பார்ப்பதும் சரியாக இருக்கும். 70 சதவீத வாசகர்கள் அறிவியல் செய்திகளின் தலைப்பை மட்டுமே படித்துவிட்டுக் கருத்து தெரிவிக்கிறார்கள், எனும் தலைப்பிலான அந்தச் செய்தியில் முதல் பத்திக்குக் கீழே இருந்ததெல்லாம் அர்த்தமே இல்லாத வார்த்தைகள்தான். ஆனாலும் அந்த செய்தி 46,000 முறைக்கு மேல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. செய்திகளைப் படிக்காமலே பகிர்வதற்கான காரணங்கள் குறித்து ஆழமான ஆய்வு அவசியம் என்றாலும்கூட இணையத்தில் பரவிவரும் ‘ஷேர்பைட்’ கலாச்சாரம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஷேர்பைட் கலாச்சாரம்

சமூக ஊடகங்களில் பகிரப்படும் அம்சங்களைப் பிரதானமாகக் கொண்ட உள்ளடக்கத் தன்மையே ஷேர்பைட். அதாவது பார்த்தவுடன் கிளிக் செய்து பகிரத் தூண்டும் அது. இப்படிப் பகிரும் தன்மையை ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் நிறுவனங்களும் பிராண்ட்களும் அதிகம் பயன்படுத்தி வந்தன. பகிர்தலின் பொருட்டுப், பொய்யான தகவல்களை இடம்பெற வைப்பதுகூட வழக்கமே. இதன் காரணமாகவே இவை கிளிக்பைட் அல்லது லைக்பைட் எனப்படுகின்றன. இப்போது இந்தப் பகிர்வு பழக்கம் சமூக ஊடகப் பயனாளிகளையும் பிடித்துக் கொண்டுவிட்டது. பகிர்வதோடு படித்துப்பார்ப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா?

சைபர்சிம்மன்

Related Posts

error: Content is protected !!