ட்விட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்கிப்புட்டாராம் எலைன் மஸ்க்!

ர்வதேச அளவில் சகலரும் களமாடும் தளம் தான் ட்விட்டர். எதை ஒன்றையுமே 280 கேரக்டர்களில் ட்வீட் மூலம் சுருங்க சொல்லி விளங்க வைக்க உதவுகிறது இந்த ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் முழு உரிமையாளராகவும், ஒரே உரிமையாளராகவும் எலான் மஸ்க் மாறியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் முன்னாள் நிர்வாகியும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புகிறேன் என அறிவித்தார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி அறிவிப்பால் மிரண்டு போன ட்விட்டர் நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் ‘பாய்சன் பில்’என்ற அனுகுமுறையை பயன்படுத்தி எலான் மஸ்கை கட்டுப்படுத்த பார்த்தனர்.அதாவது எலான் மஸ்க்கை வாங்கவிடாமல் தடுக்க எலான் மஸ்கின் பங்குகளின் விலையை அதிகரித்தும், மற்றவர்களுக்கு பங்கு விலையை குறைக்கவும் அந்நிறுவனம் முயன்றது. ஆனால் மொத்த தொகையான 44 பில்லியன் டாலரை உரிய முறையில் உடனடியாக கொடுக்க தயார் என எலான் மஸ்க் தெரிவித்ததாகவும், இதற்காக மற்ற பங்குதாரர்களிடம் தனிப்பட்ட முறையில் எலான் மஸ்க் பேசி அவர்களை சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று எலான் மஸ்க்கின் ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் ஒரே முதலாளியாகவும் எலான் மஸ்க் மாறியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்திற்குள் என்ட்ரி ஆனார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவன சிஇஓ பிராக் அகர்வால் அடுத்த நாளே ஏப்ரல் 5, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைய எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், தனக்கு இதில் விருப்பம் இல்லை என எலான் மஸ்க் அறிவத்தார். இதைத்தொடர்ந்து எலான் மஸ்க் ட்விட்டர் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டு வரலாமா, முன்னணி ட்விட்டர் பிரபலங்கள் நீண்ட நாள்கள் தங்களின் அக்கவுன்டை பயன்படுத்தவில்லையே போன்ற எலான் மஸ்க்கின் ட்வீட்கள் விவாதப் பொருளானது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் அறிவித்தார். நேற்று இந்த டீல் ஓகே ஆன நிலையில், பேச்சு சுதந்திரத்தை ட்விட்டரில் அமல்படுத்தப்போவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். “என்னை மிக மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டரில் இருப்பதையே நான் விரும்புகிறேன், காரணம் அதுதான் உண்மையான கருத்து சுதந்திரம்” என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் “பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளமாகும். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத பல விஷயங்கள் விவாதிக்கப்படும் தளமாக ட்விட்டர் உள்ளது. அதனால் முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன். புதிய அம்சங்கள் கொண்டுவரப்படும். அதன் மூலம் ட்விட்டர் மேம்படுத்தப்படும். ட்விட்டருக்கு என மிகப்பெரிய சக்தி உள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.