September 27, 2021

தூத்துக்குடி டூ கொழும்பு – பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க முடிவு!

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்த போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய அரசு இதற்கான முடிவை விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போக்குவரத்து வர்த்தக ரீதியிலும் பயன்படும் என்றும் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும் படகு போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மூலம் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த சுமார் 3000 மேற்பட்டவர்கள் சொந்த நாடு திரும்ப வழி ஏற்படும் என்று அகதிகள் மறுவாழ்வு துறை தெரிவித்துள்ளது.  கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

விடுதலை புலிகளுடனான இந்த போர் முடிவடைந்து 8 ஆண்டுகளை கடந்து 2015-ல் புதிய ஆட்சி அமைக்கப்பட்டு இருப்பதால் இடம்பெயர்ந்து வந்த அகதிகள் திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.