August 14, 2022

ரொம்ப பெருமையா இருக்குது! – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசி கபார்ட்!

அடுத்தாண்டு வர இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பதில் மிகவும் பெருமையாக இருப்பதாக துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம்தான். எனினும், கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கபார்ட், வரும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடப்போவதாக சமிபத்தில் அறிவித்தார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள முதல் இந்து பெண்ணான துளசி கபார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மத வெறுப்புணர்வு மற்றும் சில ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களால் நான் பாதிக்கப்பட்டேன். நானும் எனது ஆதரவாளர்களும் இந்து பெயர்களை கொண்டிருப்பதால், எங்களை இந்து தேசியவாதிகள் என்று குற்றம்சாட்டினர். இன்று என்னை இந்து தேசியவாதி என்று கூறியவர்கள், நாளை அமெரிக்காவில் வாழும் முஸ்லீம், யூதர்கள், ஜப்பானியர்கள், ஹிஸ்பேனியர்கள் அல்லது ஆப்பிரிக்கர்களையும் இதே போல குற்றஞ்சாட்டலாம்”

மேலும்,”இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான என் சந்திப்புகளை ஆதாரமாக முன்வைத்து, பல தவறான குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, செயலாளர் ஹிலாரி கிளின்டன், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு எம்பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் பணியாற்றி உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

”அமெரிக்க பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றேன். இப்போது, அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்து பெண் என்பது மிகப்பெருமையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

”எனது அறிவிப்பை கொண்டாடியபோது, உலகின் மூன்றாவது மிகப்பெரிய மதத்தைப் பற்றி பெருமளவில் தெரிந்திருந்தும், சிலர் என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் சந்தேகிக்கின்றனர்.

ஆசியாவில் அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றாகவும், உலகின் முக்கிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் முக்கியத்துவம் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்கி வருகிறது. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு பல ஆண்டுகளாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. என் நாட்டிற்கான என் உறுதிப்பாட்டை கேள்விக்கு உட்படுத்தி, இந்து அல்லாத தலைவர்களைக் கேள்விக்கு உட்படுத்தாதபோது இது வெறும் மதவெறுப்புணர்வு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

”அரசியல் எதிரிகளால் கடந்த காலத்தில் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து மதம் மற்றும் பிற சிறுபான்மை மதங்களின் பயத்தைத் தூண்டுவதற்கான மத வெறுப்பு முயற்சிகள் தொடர்ந்த நிலையில், கடந்த 2012 மற்றும் 2014 தேர்தல்களில், எதிர்க்கட்சி உறுப்பினர் பேசும்போது, ஒரு இந்து மதத்தவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது என்று பகிரங்கமாக பேசினார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமும் இந்துத்துவமும் இணங்கி இயங்க முடியாது என்றும் கூறினார்கள்.

2016ஆம் ஆண்டில் பென் கார்ஸன் போன்ற குடியரசு கட்சி தலைவர்கள், முஸ்லிம்கள் அமெரிக்க அதிபராக சேவை செய்ய தகுதியற்றவர் என்று கூறினர். கத்தோலிக்கர்களுடனான தொடர்பின் காரணமாக குடியரசு கட்சியைச் சேர்ந்த நீதிபதிகள் நியமனத்தை ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கள் சமீபத்தில் எதிர்த்தனர். இந்த நடவடிக்கைகள் மற்றும் மனப்பான்மைகள் அமெரிக்க அரசியல மைப்பைக் குறைத்து மதிப்பிட வைப்பதோடு, மக்களுக்கு மதத்தின் மீதான பயத்தையும் தூண்டுகின்றன” என்று துளசி கபார்ட் தெரிவித்தார்.