November 28, 2021

அய்யய்யோ.. இந்தியாவில் கொஞ்சமும் குறையாமல் எகிறிது டி.பி என்னும் காச நோய்!

இந்தியாவில் வரும் 2025- ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்க வேண்டும் என்பதே தேசியளவிலான குறிக்கோள் என்று பிரதமர் மோடி சொல்லி இருந்தார். அதாவது உலகளவில் காசநோயை 2030ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 5 வருடங்கள் முன்பாகவே இந்தியாவில் காசநோய் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆணே செய்திகள் வெளியான நிலையில்  நம் நாட்டில் இருக்கும் காசநோய் பாதிப்பில் 5% தமிழ்நாட்டில் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 20% பாதிப்பு உள்ளது.

இந்திய காசநோய் பாதிப்பு அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, 2018ம் ஆண்டில் இந்தியாவில் 21லட்சத்து 55 ஆயிரத்து 894 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டை விட 16% அதிகமாகும். தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு 93 ஆயிரத்து 327 ஆக இருந்த காசநோயாளிகள் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 917 பேராக உயர்ந்துள்ளது.

இதில் அரசு மருத்துவமனைகளில் தான் அதிக காசநோயாளிகள் கண்டறியப்படுவதாக அறிக்கை யின் தரவுகள் மூலம் தெரிகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் காசநோயாளி கள் விவரங்களை மருத்துவமனைகள் அரசிடம் கொடுப்பதில் சுனக்கம் இருக்கிறது.

இது கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. எனவே 2017ம் ஆண்டில் தனியார் மருத்துவமனைகளில் 19ஆயிரத்து 71 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு 29 ஆயிரத்து 502 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 2009ல் 44ஆயிரத்து 848 பேர் கண்டறியப்பட்டனர்.

காசநோய் கண்டறிவது பல்வேறு முன்னேறிய தொழில்நுட்பம் மூலம் அதிகமாகியிருப்பதால் நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது போல் தெரிகிறது. உண்மையில் மேலும் பலருக்கு நோய் பாதிப்பு இருக்கக்கூடும். அதை கண்டறிய வேண்டும் என்கிறார் நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் மகிழ்மாறன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காசநோய் உறுதி செய்து, நோயாளிக்கு மருந்து வேலை செய்யுமா என்பதை கண்டறிய 14 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது ஜீன் எக்ஸ்பர்ட் எனும் பரிசோதனை மூலம் இரண்டு மணி நேரத்தில் முடிவுகள் தெரியும்.

சென்னையில் அதிக பாதிப்பு:

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 7,454 பேருக்கு, மதுரையில் 8094 பேருக்கு, காஞ்சிபுரத்தில் 6145 பேருக்கு, வேலூரில் 6069 பேருக்கு கோவையில் 5821 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மருந்து எதிர்ப்புத்தன்மை அதிகரிப்பு:

காசநோய்க்கு வழக்கமாக கொடுக்கப்பட்டு வந்த மருந்துகளுக்கு நோயாளிகளிடம் ஒரு எதிர்ப்பு தன்மை உருவாகி வருகிறது. அதனால் வழக்கமாக கொடுக்கப்பட்டு வந்த மருந்துகள் நோயை குணமாக்க முடியவில்லை. யாரெல்லாம் இந்த எதிர்ப்புத்தன்மையுடன் இருக்கிறார்கள் என கண்டறிந்து அவர்களுக்கு வேறு வகையான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நோயாளிகள் மருந்தை தொடர்ந்து முறையாக உட்கொள்ளாதது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில் 6% பேருக்கு காசநோய் மருந்து எதிர்ப்பு தன்மை உள்ளது என திருவொற்றீஸ்வரர் நெஞ்சக நோய் கண்காணிப்பாளர் மருத்துவர் ரமேஷ் கூறுகிறார்.

சிகிச்சைப் பெறாத ஒரு காசநோயாளி ஒரு வருடத்தில் 15 பேருக்கு அந்த நோயை பரப்பக் கூடும். எனவே தொடர் சளி, இருமல் போன்ற காசநோய் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகுவது நம் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர் உயிரை காப்பாற்றவும் அவசியமாகிறது.