September 17, 2021

தினகரனின் 19 எம்.எல். ஏ.க்கள் தடாலடி!-முதல்வர் எடப்பாடி-க்கு அளித்த ஆதரவு வாபஸ்!_

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி அவர்கள் கடிதம் அளித்தனர். தற்போது சட்டசபையில் அதிமுக பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமானால் 118 எம்.எல்.ஏக்கள் தேவை. 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 19 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சென்றதால் 103 ஆக குறைந்துள்ளது. இதில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் சேர்த்தால் 114 ஆக உயர வாய்ப்பு உள்ளது. நடுநிலை வகித்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் ஆதரவையும் சேர்த்தால் 115 பேர் எடப்பாடி பக்கம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த ஆறு மாதங்களாக அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விழா நடந்த அதே சமயத்தில் டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் ஆளுநரை இன்று காலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்ற அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், இணைப்புக்கு பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர். அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்து விட்டதாகவும், அதனால் அவரை மாற்ற வேண்டும் என்றும், விரைவில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், தங்கள் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து மீடியாமேன் உதய் சொல்லும்போது, “117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி நிலைக்கும்.. ஆனால் தற்போதைய நிலையில் 114பேர்தான் எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். இதிலும் தினகரன் அணி சொல்வது போல எத்தனை எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. இவர்களின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.. இப்போ இருக்கிற சூழலில் சட்ட சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தா ஆட்சி பணால் ஆகிடும்போல இருக்கே..

தினகரம் தரப்பு மூலம் எம்.எல்.ஏக்களுக்கான பேரங்கள் பலமாக பேசப்பட்டு வருகின்றது என்றும் சொல்லப்படுகின்றது… இன்னும் எத்தனை எம்.எல்.ஏக்கள் விலைபோவார்கள் எனத் தெரியவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்கள் எங்கிருந்து யார் வழியாக எம்.எல்.ஏக்களுக்கு போகின்றது என்பதை யாராலும் அறியமுடியவில்லை.

இக்கட்டான சூழலில் தற்போது தமிழகம் உள்ளது. இந்த ஆட்சி நீடித்தால் தொடர்ந்து பல சிக்கல்கள் எழத்தான் செய்யும். இவர்கள் பஞ்சாயத்து பேசுவதும், கூட்டணி பேரங்கள் நடத்துவதும், பதவிகளுக்காக ஆட்சிக்கு எதிரான அறிக்கைகள் விடுவதும், பின்னர் வளைந்து கொடுப்பதும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதும் என தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் தமிழகத்தில் எந்த துறையிலும் பணிகள் சிறப்பாக நடைபெறாது.. ஏற்கெனவே தமிழகம் இருண்டுபோய் கிடக்கின்றது. கடந்த ஒருவருடமாக எல்லாத்துறைகலும் செயலிழந்து போய் பணிகள் அனைத்தும் முழுமையாக நடைபெறாமல் இழுபறி நிலைதான் நீடித்துக்கொண்டு வருகின்றது.

இந்த கண்ணாமூச்சி விளையாட்டுகள் எல்லாம் இதோடு முடிவுக்கு வந்துவிட்டால் நல்லது.. மறுபடியும் சட்டசபை தேர்தல் வந்தால் யாருக்கு செல்வாக்கு அதிகம், என்பதை யார்வேண்டு மானாலும் நிரூபித்துவிட்டு ஆட்சியை அமைத்துக்கொள்ளட்டும்..

ஒன்று மறுபடியும் முத்தரப்பிலும் பேரங்களும் அதிகாரங்கள் பெறுவதிலும், இருக்கும் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதிலும் பேச்சு வார்த்தைகள் மூலம் ஏற்பட வாய்ப்புண்டு. இல்லேன்னா ஆட்சி கலைவதும் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளையும் தமிழக மக்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.