October 18, 2021

டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைச்சிடுச்சு! – நாளை ரிலீஸ்!

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்குள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய நீதிமன்ற காவல் வருகிற 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை ஏற்கனவே தனிக்கோர்ட்டு நிராகரித்துவிட்டது.டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது.

இந்நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி தனி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்லலாம் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி தெரிவித்தார். மேலும் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் தினகரன் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜாமீன் பெறுவதற்கான நடைமுறைகள் முடிவடைந்து விட்டால், தினகரன் இன்று மாலையே சிறையில் இருந்து வெளியே வந்துவிட வாய்ப்புள்ளது. ஒருவேளை தாமதமானால், நாளை சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்றும் நாளையே அவர் சென்னை வர இருப்பதாகவும்  தெரிகிறது..