December 8, 2021

டிடிவி தினகரன் தனது அமமுக -வை கட்சியாக பதிவு செய்ய மனு!

ஒன் மேன் ஆர்மி ரேஞ்சில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் செய்யும் டிடிவி தினகரன் நேற்று அறிவித்தது போல் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக துணைப் பொதுசெயலாளராக இருந்த டிடிவி தினகரனை அக்கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அதிரடியாக நீக்கம் செய்தனர். இதையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக பிரிந்து அமமுக என்ற அமைப்பை உருவாக்கினார். மேலும் அதிமுகவை மீட்டே தீருவோம் என தெரிவித்தார். எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்து வந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை மறுக்கவே நீதிமன்றத்தை நாடினார் தினகரன். அப்போது பதில் அளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பதிவு செய்ய வில்லை என தெரிவித்தது.

இதையடுத்து நீதிமன்ற வலியுறுத்தலின் பேரில் அவர் அணிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப் பட்டது. அதன்படி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டனர். இதனிடையே சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அமமுகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கோரி டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுத்து அங்கீகாரம் அளிக்கும் என்றே தகவல் வருகிறது..

இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 

இதையடுத்து சற்றுமுன் இந்த நான்கு தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சூலூரில் சுகுமார், அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீது, திருப்பரங்குன்றத்தில் மகேந்திரன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.