தேர்தல்களில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தானே! – டிடிவி தினகரன் பேட்டி = வீடியோ

தேர்தல்களில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தானே! – டிடிவி தினகரன் பேட்டி = வீடியோ

நடந்து முடிந்த பார்லிமென்ட் & அசெம்பளி எலெக்ஷனில் சகல தரப்பினராலும் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தினகரன் தலைமையிலான அமமுக எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் 22.25 லட்சம் வாக்குகளை மட்டுமே  பெற்ற அமமுகவுக்கு பல வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது குறித்து சோஷியல் மீடியாவில் மீம்ஸ் ரவுண்ட் கட்டி அடித்த வண்ணம் உள்ளது. அதே சமயம் இந்த தோல்வி தொடர்பாக வரும் ஜூன் 1ஆம் தேதி அமமுக ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த போது, “இந்த தேர்தல் முடிவுகள் வந்த அன்றே நான் ட்விட்டர் பக்கத்தில் மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம், அது கிடைக்கவில்லை. இதற்கான காரணம் போகப் போகப் புரியும். ஆனால் என் கேள்வி என்ன வென்றால் சுமார் 300 பூத்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பூஜ்ஜியம் வாக்குகளை பெற்று இருப்பதாக கணக்குகள் வருகிறது. மக்கள் வாக்களிக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் முகவர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். அவர்கள் 4 பேர் ஓட்டளித்து 4 வாக்குகள் ஆவது வரவேண்டும் அல்லவா, எப்படி ஒரு ஓட்டு கூட பதிவு ஆகாமல் இருக்க முடியும்? இதனைத் தேர்தல் ஆணையம்தான் விளக்கம் அளிக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் என் சொந்த வாக்குச்சாவடியிலேயே வெறும் 14 வாக்குகள்தான் பதிவாகி இருக்கிறது. என்னுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போட்டால்கூட 100 வாக்குகளாவது வரவேண்டும். அப்படி இருக்கையில் எப்படி 14 வாக்குகள் மட்டும் பதிவாகி இருக்க முடியும்?

இதை அடுத்து செய்தியாளர்கள் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது பற்றி கேள்வி கேட்டதற்கு, ’’ அவர்கள் வெற்றி பெற்ற 9 தொகுதியிலும் கிட்டத்தட்ட தோற்றவர்கள் நெருக்கமாகத்தான் வந்திருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கும் என்பதால் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் , 37 இடங்களை கைப்பற்றிய திமுக தேனியில் மட்டும் எவ்வாறு தோற்றது? தேனியில் அதிமுகவை ஜெயிக்க வைத்தது யார்? இதெல்லாம் நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றியும் தோல்வியும் எங்களுடைய பணியை எந்தவிதத்திலும் பாதிக்காது எங்களுடைய பணியை நாங்கள் சிறப்பாக தொடர்வோம்.

இன்னும் எத்தனையோ தேர்தலை சந்திக்க இருக்கிறோம். சென்ற முறை திமுக 37 இடங்களில் தோற்றது, ஆனால் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை, எப்போதும் எதுவேண்டுமானாலும் மாறும், இந்த ஆட்சி, முடிவை நோக்கிதான் போய்க் கொண்டு இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்களும் அதனைப் பார்க்கத்தான் போகிறீர்கள். அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல் யார் என்பது குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தெரியும்.மொத்தத்தில் தேர்தலில் மக்கள் எங்களுக்கு கொடுத்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்’’ என்று கூறினார்.

Related Posts

error: Content is protected !!