April 2, 2023

வேடந்தாங்கலை சிதைக்க முனைவதா? – டிடிவி தினகரன் கண்டனம்

இந்தியாவின் பழங்காலப் பறவைகள் சரணாலயமாகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. வேடந்தாங்கலுக்குத் தமிழ் மொழியில் ‘வேட்டைக்காரரின் குக்கிராமம்’ என்று பொருள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் நிலப்பிரபுக்களினால் இந்த இடம் வேட்டையாடப்பட்டது. இந்தச் சரணாலயம் பலவிதமான பறவைகளை ஈர்த்தன. ஏனெனில் அங்குள்ள சிறிய ஏரிகள் பறவைகளுக்கு உணவிடமாக அமைந்தன. அதன் பல்லுயிரியல் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் வேடந்தாங்கலில் ஒரு பறவை சரணாலயத்தை1798 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது. 1858 ஆம் ஆண்டு செங்கல்பட்டு ஆட்சியின் கட்டளையால் இது நிறுவப்பட்டது. அப்பேர்பட்ட சரணாலயத்தை சிதைக்க இந்த எடப்பாடி அரசு முயல்வதாகவும் அந்த இடத்தில் தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க தமிழக அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கிச் செல்கின்றன. வேடந்தாங்கல் சரணாலயம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மருந்து கம்பெனி பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி அதற்கான கட்டிடமும் கட்டியுள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு உட்பகுதியில் தனியார் மருந்து நிறுவனம் (sun pharmaceutical) கட்டிடம் கட்டியுள்ளது. இந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் வனத்துறை கடந்த மார்ச் 19 ம் தேதி அன்று வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தின் ஐந்து கிலோ மீட்டர் எல்லையை இரண்டு கிலோ மீட்டராக சுருக்கி வரையறை செய்துள்ளது.

தனியார் மருந்து நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்குத்தான் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.