திருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்!

திருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்!

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இனி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சர்டிபிகேட் அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 25ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் 25 ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும்.

இதனால், இம்மாதம் 26ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும். இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும். மேலும், இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேருக்கு இலவச டோக்கன் வழங்கப்படும் நிலையில், அவற்றை வாங்குவதற்கு கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில், இன்றைய தரிசனத்துக்கான இலவச டிக்கெட் அதிகாலை 4 மணிக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், பக்தர்களின் கூட்டம் காரணமாக, செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால், ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து டோக்கனும் விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் பக்தர்கள் கோயில் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 23-ம் தேதிக்கான டோக்கன்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

error: Content is protected !!