அமெரிக்கா ஹவுஸ்ஃபுல் ஆகி போச்சு! – ட்ரம்ப் ஸ்டேட்மெண்ட்!

சர்வதேச வரலாற்றில் முதல் முறையாக இரு பெரும் நாடுகளுக்கிடையே மிகப் பெரிய சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் சூழலில் மெக்சிகோ எல்லைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்குள்ள அகதிகளுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அமெரிக்கா நிரம்பிவிட்டது. இனி யாருக்கும் இங்கு இடமில்லை என dரம்ப் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான அகதிகள் மெக்சிகோ எல்லை வழியே  அமெரிக்கா வில் நுழைந்து அங்கு குடியேறவேண்டுமென்று மெக்சிகோ எல்லை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நூற்றுக்கணக்கான அகதிகள் வெராக்ரஸ் நகரை அடைந்துள்ளனர். அகதிகள் அங்கங்கே முகாமிட்டு தங்கி இருக்கும் இவர்கள் எப்படியாவது அமெரிக்காவினுள் நுழைந்து விட வேண்டுமென தீவிரமாக உள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்க எல்லையில் நுழைய முயன்றவர்களை அமெரிக்கா பாதுகாப்பு படை வீரர்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.இந்நிலையில் மேலும் அதிகளவிலான அகதிகள் வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது .இந்நிலையில் சட்டவிரோதமாக ஊடுறுவும் அகதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் அதிபர் டிரம்ப், அகதிகளை தடுக்க எல்லையில் பலமான சுவரை எழுப்ப தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை மீறி எல்லை சுவர் கட்டுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான நிதியை ஒதுக்க அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதனிடையே  கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள காலெக்சிகோ நகருக்கு அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டார். அங்கு எல்லை ரோந்து படை வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளைச் சந்தித்து பேசினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் முன்னிலையில் அகதிகளுக்கு அறிவிப்பு ஒன்றை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார்.

‘‘அமெரிக்கா நிரம்பிவிட்டது. அதனால் இனி உங்களை நாங்கள் ஏற்க முடியாது. எனவே வந்த வழியாக திரும்பி செல்லுங்கள்’’ என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் வருகையை முன்னிட்டு காலெக்சிகோ நகரில் அவரது வாகனம் சென்ற பாதையில் பலர் எல்லை சுவருக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி அவரை வரவேற்றனர்.

அதேசமயம் மெக்சிகோ எல்லை நகரான மெக்சிகாலியில் நூற்றுக்கணக்கான மக்கள் அதிபர் டிரம்பின் எல்லை சுவர் திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தினர்.

‘‘குடும்பங்களை பிரிப்பதை நிறுத்துங்கள். நீங்கள் சுவரை கட்டினால் எங்கள் தலைமுறை அதை தரைமட்டமாக்கும்’’ போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர். அதிபர் டிரம்பை குழுந்தை போல் சித்தரிக்கும் பலூன் ஒன்றும் போராட்டத்தில் இடம் பெற்றிருந்தது. சட்டவிரோத அகதிகளை தடுக்க மெக்சிகோ எல்லையை முழுவதுமாக மூடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.