அதிபர் டிரம்ப்புக்கு அடுத்த 4 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு!- ஆதரவாளர்கள் கோஷம்!

அதிபர் டிரம்ப்புக்கு அடுத்த 4 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு!- ஆதரவாளர்கள் கோஷம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவி்த்து வாஷிங்டன் நகரில் குடியரசுக் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக திரண்டு நேற்று போராட்டம் நடத்தினார்கள். அடுத்த 4 ஆண்டுகளுக்கு டிரம்ப் அதிபராகத் தொடர வேண்டும். மார்க்சிஸ்ட் சிந்தனையின் கீழ் வாழ முடியாது என்று அவர்கள் கோஷமிட்டார்கள்.

அமெரிக்காவில் கடந்த 3-ம்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பிடன் 270 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை அதிபராக போட்டியிட்ட கமலா ஹாரிசும் வெற்றி பெற்றார். ஆனால், 2-வது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 230க்கும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன எனக் கூறி பல்வேறு மாநிலங்களில் குடியரசுக் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ள என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே ப்ரீடம் ப்ளாஸா பகுதியில் நேற்று காலை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். ‘‘அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது, அதிபர் டிரம்ப்புக்கு அடுத்த 4 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கிட வேண்டும். அமெரிக்காவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாங்கள் வாழ முடியாது’’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அமெரிக்க கொடிகளை உயர்த்திப் பிடித்தும், அதிபராக மீண்டும் டிரம்ப் வர வேண்டும் என்ற வாசகங்களை ஏந்திய பதாகைகளைத் தூக்கிப்பிடித்து போராட்டம் நடத்தினார்கள். இதேபோல ப்ளோரிடாவில் உள்ள டெல்ரே பீச் பகுதியிலும் நேற்று டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். மீண்டும் டிரம்ப் அதிபராக வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதேபோல மிச்சிகன் நகரில் உள்ள லான்சிங் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு டிரம்ப்புக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். ஜோ பிடன் 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தி்ல் வென்றதில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர்.

error: Content is protected !!