அறிவிச்சிட்டுப்புட்டாருய்யா.. அமெரிக்கா அதிபர் எமெர்ஜென்சி அறிவிச்சிட்டார்!

அறிவிச்சிட்டுப்புட்டாருய்யா.. அமெரிக்கா அதிபர் எமெர்ஜென்சி அறிவிச்சிட்டார்!

நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம் -மில் நேற்றே குறிப்பிட்டிருந்தபடி அமெரிக்கா, மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசர நிலையை நேற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்து விட்டார். டிரம்ப் தொடர்ந்து அடம் பிடித்ததால் நாடாளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு அதிபர் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்தனர். இதனால், பொறுமை இழந்த அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்தார்.கடந்த 1976ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக்கும்.

அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சமீபத்தில் எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடந்தது. எல்லைச் சுவருக்காக அதிபர் டிரம்ப் 570 கோடி டாலர்கள் (சுமார் ரூ.40,300 கோடி) கோரினார். ஆனால், அதில், 137.5 கோடி டாலர்கள் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வந்தபடி கான்க்ரீட் சுவர்களை எழுப்ப ஜனநாயக கட்சியினர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இதை அடுத்து அதிபர் டிரம்ப் தனக்கு இருக்கும் அரசமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்துகிறார் என்று மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகக் கட்சி எம்பிக்களும் கண்டித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், கிரிமினல் குற்றவாளிகள் ஆகியோரைத் தடுக்க இந்த சுவர் மிகவும் அவசியமானதாகும். இந்த திட்டம் மிகப்பெரியது, சிறப்பு வாய்ந்தது. நிதி ஒதுக்கீடு மூலம் இந்த திட்டத்தை நான் விரைந்து முடிப்பேன். இந்தத் திட்டத்தை நீண்ட நாட்கள் கொண்டு செல்லமாட்டேன். எனக்கு முன் ஆட்சியில் இருந்த அதிபர்கள் பலர் இதற்கு முன் அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஜக் ஸ்குமர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்,”அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்தது சட்டவிரோதம். அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை” எனத் தெரிவித்தனர். மேலும், அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு குடியரசுக் கட்சி எம்பிக்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!